திருநெல்வேலி: சமூக அநீதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு, மிகப்பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த திரைப்படத்தில் நெல்லையைச் சேர்ந்த தங்கராஜ் கதாநாயகனின் தந்தையாக நடித்திருந்தார். படத்தில் கிராமத்துக் கூத்து கட்டும் வேடத்தில் நடித்திருந்தார்.
நாட்டுப்புற கலைஞரான இவர், இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாகப் பலரின் பாராட்டுக்களைப் பெற்றார். இந்நிலையில் தங்கராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சூழலில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு பேச்சுக்கணி என்ற மனைவியும், அரசிளம் குமரி என்ற மகளும் உள்ளனர். முதலில் போதிய வசதி இல்லாத சிறிய வீட்டில் வசித்து வந்த பரியேறும் பெருமாள் தங்கராஜுக்கு நெல்லை ஆட்சியர் விஷ்ணு உதவியுடன் பல்வேறு தன்னார்வலர்கள் இணைந்து, புதிய இல்லம் சமீபத்தில் கட்டிக் கொடுத்தனர்.
மேலும் தங்கராஜ் மகளுக்கு ஆட்சியர் விஷ்ணு, சிறப்பு உதவியாக அரசு அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணி நியமனம் செய்து கொடுத்தார். இது போன்று பல்வேறு உதவிகள் கிடைத்த நிலையில் தங்கராஜ் உடல்நிலை குறைவால் உயிரிழந்திருந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகர் தங்கராஜின் உடல் வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரில் உள்ள அவரது இல்லத்தில், அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இதில் சில சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்