சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் திரைப்படமான ‘கஸ்டடி’ (Custody) படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் வெங்கட் பிரபு, நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, ராம்கி, பிரியாமணி, சரத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் கஸ்டடி திரைப்படம் குறித்து படக்குழு தங்களது கருத்துக்களை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.
அதில் நடிகர் ராம்கி, “இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர்களின் நண்பராக இருப்பார். தெலுங்கு திரையுலகில் தமிழ் நடிகர்கள் நன்றாக நடித்தால் ஏற்றுக் கொள்வார்கள். அதுபோல நாக சைதன்யாவை தமிழ் சினிமாவும் ஏற்றுக்கொள்ளும்” என்றார்.
பிரியாமணி, “தமிழில் எனக்கு கடைசியாக எந்த படம் ரிலீஸ் ஆனது என்றே தெரியாது. இந்த படத்துக்கு பிறகு நிறைய தமிழ் படத்தில் என்னை பார்க்கலாம். அதற்காக வெங்கட் பிரபுவுக்கு நன்றி. வெங்கட் பிரபு தான் இந்த கதாபாத்திரம் பண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தார். மேலும் அரவிந்த் சாமி இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுவும் ரசிகர்களுக்கு பிடிக்கும். நாக சைதன்யா நிறைய தமிழ் படங்களில் நடிக்க வேண்டும்” எனக் கூறினார்.
இயக்குனர் லிங்குசாமி, “வெங்கட் பிரபு என்னுடைய ஜி படத்தில் நடித்திருந்தார். பிறகு என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவர் இயக்கிய மாநாடு தமிழ் சினிமாவில் முக்கியமான படம். இப்படம் மிகப் பெரிய வெற்றி அடையும். நாக சைதன்யா தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியை பெறுவார்” எனத் தெரிவித்தார்.
சரத்குமார், “நாக சைதன்யாவை தமிழ் சினிமாவிற்கு வரவேற்கிறோம். திறமையான இயக்குனர் வெங்கட் பிரபு. அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. அவருடைய மாநாடு அருமையான படம். இப்படத்தில் அன்பால் பிணைக்கப்பட்ட கைதிகளாக இருந்தோம். படத்தில் எனக்கு இரண்டே துணிதான். ஒருவரை திரையரங்குகளில் சென்று படம் பார்க்க வைக்க வேண்டும் என்றால் எதாவது புதுமை இருக்க வேண்டும். நாக சைதன்யா சிறப்பாக தமிழ் பேசியுள்ளார்” என்றார். மேலும் சரத்குமார் பேசிய போது நடிகர் கமல் போல் மிமிக்ரி செய்து காட்டினார்.
வெங்கட் பிரபு, “இது நாக சைதன்யாவை தமிழ்நாட்டுக்கு வரவேற்கும் நிகழ்ச்சி. லிங்குசாமி படங்களின் காட்சிகளில் நிறைய திருடியுள்ளேன். ஜி படத்தை ஒன்றரை ஆண்டுகள் எடுத்தோம். உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். எனது மானசீக குரு லிங்குசாமி. இது எனது முழுநீள தெலுங்கு படம். மேலும் நாக சைதன்யா பந்தா காட்டாதவர். நாயட்டு மலையாள படத்தை பார்த்து இன்ஸ்பையர் ஆகி இப்படத்தை எடுத்தேன். ரசிகர்களுக்காக கமர்ஷியல் கலந்து எடுத்துள்ளேன். இப்படத்தில் ஒரு பாடலில் ஆங்கில வரிகளை எனது மகள் எழுதியுள்ளார்” எனக் கூறினார்.
நாக சைதன்யா, “தமிழில் இத்தனை வரவேற்பு கொடுத்துள்ளீர்கள். வெங்கட் பிரபு நிச்சயம் வெற்றி பெறுவார். மேலும் படம் நன்றாக வந்துள்ளது. தமிழில் நடிக்க வேண்டும் என்பது எனது ஆசை. தற்போது அந்த கனவு நிறைவேறியுள்ளது. என்மீது நம்பிக்கை வைத்து தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளார். ஆனால் என்னைவிட தமிழ் சினிமாவில் கீர்த்தி ஷெட்டி சீனியர் நான் ஜூனியர் தான்” என்றார்.