சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த மாதம் 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று இப்படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. லியோ படததின் இசை வெளியீட்டு விழா நடைபெறாத நிலையில் தற்போது லியோ படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருகிறது.இந்த வெற்றி விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய், த்ரிஷா, மன்சூர் அலிகான், மடோனா செபாஸ்டியன், சாண்டி, மிஷ்கின், கௌதம் மேனன், தயாரிப்பாளர் லலித் குமார், அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய தினேஷ் மாஸ்டர், "விஜய் நடித்த பல படங்களில் குரூப் டான்சராக பணியாற்றினேன். அதன் பிறகு அவரது நிறைய படங்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றினேன். அப்போது முதல் இப்போது வரை அவர் மாறாமல் அப்படியே தான் இருக்கிறார். விஜய்யின் எந்த பாடலாக இருந்தாலும் ஸ்பெஷல் தான். நான் ரெடி பாடலில் மன்சூர் அலிகானை ஆட வைக்க மிகவும் கஷ்டப்பட்டேன்" என்றார்.
பிறகு பேசிய இயக்குநர் மிஷ்கின், "ஒரு மாதம் முன்பு விமான நிலையத்தில் டாய்லெட்டில் வைத்து என்னிடம் ஒருவன் லியோ அப்டேட் கேட்டார். ப்ரூஸ் லீ, மைக்கேல் ஜாக்சனுக்கு பிறகு நான் கண்ணால் பார்த்த லெஜன்ட் விஜய். என்னுடைய திரை வாழ்வில் முதல் படம் யூத் திரைப்படம் . 23 ஆண்டுகளாக எனது தம்பியை பார்த்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு துளி கூட மாறாமல் அதே அன்பு அதே புன் சிரிப்பு. நான் இந்த நிகழ்ச்சிக்கு 4 மணிக்கு வந்தேன் விஜய் 2 மணிக்கு வந்துள்ளார்.
படப்பிடிப்பில் 8 மணிக்கு மேக்கப்புடன் தயாராக இருக்கும் ஒரே நடிகர் விஜய். உழைப்பால் உயர்ந்த மகா கலைஞன் விஜய். இப்படத்தில் எனக்கு முதல் காட்சியே விஜய்யுடன் சண்டைக் காட்சி தான். என்னை பார்த்ததும் அண்ணா என்று கட்டியணைத்தார். அந்த கதகதப்பை நான் மறக்கவே மாட்டேன். நான் விஜய் உடன் படம் பண்ண வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை.
என் இதயத்தில் இருந்து பேசுகிறேன். நான் விஜய்யை அவன் என்றதற்கு எனக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்தனர். அவர் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள். போஸ்டர் ஒட்டியவர் நூறு ஆண்டுகள் வாழ நான் பிராத்திக்கிறேன். விஜய் திரையிலும் நிஜத்திலும் ஹீரோ தான். இவரை பார்த்தால் மனம் துள்ளிக் குதிக்கிறது. விஜய் 200 ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பிராத்திக்கிறேன். 25 ஆண்டுகள் ஒருவரை பின் தொடர என்ன காந்தம் அவர் வைத்துள்ளார் என்று புரியவில்லை.
விஜய் ஜேம்ஸ் பாண்ட் போன்ற கதாபாத்திரம் செய்ய வேண்டும் என்பது எனது ஆசை. அவர் உலகம் முழுவதும் சண்டை செய்ய வேண்டும். விஜய் எவ்வளவு பிடிக்கும் என்ற கேள்விக்கு, விஜய்க்கு எனது இதயத்தை அறுத்து கொடுத்து விடுவேன்” என கூறினார்.
இதையும் படிங்க: "சார்பட்டாவை விட தங்கலானில் 100 மடங்கு ரஞ்சித்தின் மேக்கிங் இருக்கும்" - நடிகர் விக்ரம்!