இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பொதுவாக பழைய ரெட்ரோ பாடல்களை, தன் படங்களில் வைப்பது லோகேஷ் கனகராஜின் வழக்கம். அந்த வகையில், தற்போது வெளியான 'விக்ரம்' திரைப்படத்திலும் சில ரெட்ரோ பாடல்களை காட்சிகளில் பயன்படுத்தியுள்ளார், லோகேஷ்.
இந்நிலையில், அதில் இடம்பெற்ற 1995இல் வெளியான 'அசுரன்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சக்கு.. சக்கு... வத்திக்குச்சி..’ பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மன்சூர் அலி கானின் மாஸான நடனத்தில் அமைந்த இப்பாடலை வைரல் செய்து வருகின்றனர், நெட்டிசன்கள்.
சமீப காலங்களில் அவ்வப்போது இணையத்தில் ’தக் லைஃப்’ சேட்டைகள் மூலம் ட்ரெண்டாகும் மன்சூர் அலி கான் ஆரம்ப காலகட்டங்களில் குரூப் நடனமாடுபவராகத் தான் இருந்தாராம். தற்போது, ட்ரெண்டாகி வரும் அவரின் பாடலைக் குறித்து கேட்டபோது, தான் இப்போது கூட இறங்கிக் குத்த காத்திருப்பதாகவும், இயக்குநர்கள் தான் தன்னைப் பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவித்துள்ளார், மன்சூர் அலி கான். ஏற்கெனவே லோகேஷ் கனகராஜ் எடுத்த ’கைதி’ திரைப்படம் முதலில் மன்சூர் அலி கான் நடிப்பதற்காக எழுதப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'விக்ரம்' பட வெற்றியைத் தொடர்ந்து ராமேஸ்வரம் சென்று வந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்