சென்னை: கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம், பத்து தல. இப்படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பத்து தல படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை ஒட்டி சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. சிம்பு ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் ஏஆர் ரஹ்மான் படத்தில் உள்ள பாடல்களைப் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
இந்நிலையில் இன்று பத்து தல திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், சாயிஷா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் கிருஷ்ணா பேசுகையில், ''இதனை ஒரு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியாகப் பார்க்கிறேன். பலரது நல்ல மனது தான் இந்த படத்தை எடுத்து முடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. சிம்பு போல் மாஸ் ஹீரோவை வைத்துக் கொண்டு படம் எடுப்பது கடினமான வேலை. மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இப்படத்தில் ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் சிம்பு வாழ்ந்துள்ளார். இதில் புது விதமான கௌதம் கார்த்திக்கை பார்ப்பீர்கள். இதில் கௌதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார். சிம்புவுக்கு தங்கையாக நடிக்க எந்த நடிகையுமே முன்வரவில்லை. அனுசித்தாரா மட்டுமே ஒப்புக்கொண்டார்'' எனப் பேசினார்
நடிகை சாயிஷா, ''எனது வெற்றிக்குப் பின்னால் எனது கணவர் ஆர்யா உள்ளார். அவர் இல்லை என்றால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில் நான் ஆடியிருக்க முடியாது'' எனக் கூறினார்.
நடிகர் கௌதம் கார்த்திக் பேசுகையில், ''இப்படத்தில் இயக்குநர் கிருஷ்ணா என் கதாபாத்திரத்தையே மாற்றியுள்ளார். நன்றி. என் தாத்தாவை நான் பார்த்ததில்லை. சினிமா எனக்கு கோயில். சாயிஷா மிகச்சிறந்த டான்ஸர். சிம்பு என்னையும் ஒரு ஆளாக மதித்து ஹெலிகாப்டரில் முன் இருக்கையில் உட்கார வைத்தார். சிம்பு இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது'' என்றார்
நடிகர் சிலம்பரசன் கூறியதாவது, ''கௌதம் மேனன் வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எடுப்பாரானு தெரியாது. ஏனென்றால் அவர் அவ்வளவு படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தில் அனைவருக்கும் சரி சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கௌதம் கார்த்திக்கின் கதாபாத்திரம் குறைக்கப்பட்டுள்ளதாக பேசுகின்றனர். ஆனால், எல்லோருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆக்ஷன் பண்ணுவது ரொம்ப கஷ்டம். கௌதம் கார்த்திக் அருமையாக செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது. விக்ரம் படம் போல் இந்தப் படத்தில் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும். ஏஆர் ரஹ்மான் மிகப்பெரிய மனிதர். ஓய்வின்றி உழைத்துக்கொண்டு இருக்கிறார்'' எனப் பேசினார்.
இதையும் படிங்க: எனக்கு மிரட்டல் வந்தாலும் பரவாயில்லை; அரசியல் என்றால் என்ன என்பதைக் காட்டியுள்ளோம் - இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன்