நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(மே 15) நடைபெற்றது. அதில் பேசிய கமல், “ நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு என் படத்தின் விழா. அதற்கு நான் மட்டுமல்ல காரணம். நீங்களும்தான். தமிழகத்தை பொறுத்தவரை சினிமாவும் அரசியலும் ஒட்டிப்பிறந்தவை. நான் முழுநேர நடிகனும் அல்ல. பாதி நேரம் நடிக்காததால் பல இன்னல்களைச் சந்தித்துள்ளேன்.
படத்திற்கு பல பட்டியல்கள் சொல்கிறார்கள். லோகேஷ் என் வீட்டின் வாசலில் வந்து நின்றதாக சொன்னார். நானும் சிவாஜி, எம்ஜிஆர் வீட்டு வாசலில் நின்றவன். நான் விழுந்தாலும் என்னை எழுப்பியவர்கள் நீங்கள். நான் முதலில் அரசியலை தேடி போன போது STRஇல் உள்ள TR என்னைத் தேடி வந்து விட்டார். என்னை அனைத்து நீங்கள் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டார்.
நம்பர் 1 படம், நம்பர் 2 படம், பான் இந்தியா படம் என்று என்னவெல்லாமோ சொல்கிறார்கள். அரசியல் களத்தில் புதிய நாகரிகத்தை ஏற்படுத்த வேண்டியது, நமது கடமை. இந்தியாவின் அழகு பன்முகத்தன்மை தான். எல்லோரும் இணைந்து கைகோர்த்தால் தான் இந்தியா. இந்தி ஒழிக என சொல்வது என் வேலையல்ல. எனக்கு இன்னொரு மொழியை ஒழிக சொல்வது உடன்பாடு கிடையாது.
எனக்கு சுமாராகத் தான் பேச வரும் இந்தியும் சரி தமிழும் சரி. நான் படிக்காதவன். தமிழ் வாழ்க. எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். தாய் மொழியை மறக்கக் கூடாது. அதற்கு யார் இன்னல் செய்தாலும் நான் வருவேன். எனக்கு இன்னும் வீறு கொண்டு எழுகிறது, தமிழ் முழக்கம்.
திரையரங்கு முதல் சாளரம். இரண்டாவது சாளரம் டிஜிட்டல். ஓடிடி வரும் என்பதை சொன்னவன்நான். நல்லவைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். காலண்டரில் வெங்கடாஜலபதி படம் போடுவதால் திருப்பதியில் கூட்டம் குறையாது. ரசிகர்கள் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்ற ஒப்புதல் அளித்த இளைஞர்கள் இன்று என்னை போல் தாடி நரைத்து இங்கு அமர்ந்திருக்கிறார்கள்.
எனது நிறுவன விழாக்களில் இளையராஜா இல்லாத விழாக்கள் இல்லை. பா.இரஞ்சித் உங்கள் எதிர்பார்ப்புக்கு விதை போற்று சென்றிருக்கிறார். அதுவும் நடக்கத்தான் போகிறது. மு.க.ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்ட நண்பர். எப்படி என்று கேட்பார்கள். நானும் ரஜினியும் போட்டியாளர்களாக இருந்து கொண்டு நண்பர்களாக இல்லையா..? அப்படித் தான்..!. கடைசியாக படத்தில் கைகோர்த்த தம்பி சூர்யாவிற்கு நன்றி” எனப் பேசினார்.
இதையும் படிங்க: ''குத்துறங் கொம்மா' என்றால் இதான் பா...!'': விளக்கமளித்த கமல்!