சென்னை: தமிழக காவல் துறை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நேற்றிரவு போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கார்த்தி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மாணவர்களும் இளைஞர்களும் விளையாட்டு போட்டிகளில் அதிகம் ஆர்வத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது பொன்னியின் செல்வன் திரைப்படம். இத்திரைப்படத்தில் கர்த்தி வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் கார்த்தியின் நடிப்பு அனைவராலும் பெரிதும் பாராட்டி பேசப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அவர் ராஜூ முருகன் இயக்கத்தில் “ஜப்பான்” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
கார்த்தி நடிப்பு மட்டுமின்றி உழவன் பவுண்டேசன் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவதோடு சமூக அக்கரை உள்ளவராக விளங்கி வருகிறார். இந்நிலையில் நேற்று போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அவர் இன்றைய காலத்தில் போதை பொருட்கள் அதிக அளவில் புழக்கத்தில் இருப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: திருச்சியில் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரப்பதிவு.. பலே கும்பல் சிக்கியது எப்படி?
அதனை பயன்படுத்தும் இளைஞர்களுடைய வயது வரம்பு குறைந்து கொண்டே வருவதாகவும், முன்னர் கல்லூரி படிக்கும் இளைஞர்கள் மட்டும் மது அருந்தி வந்த நிலையில் தற்போது பள்ளி செல்லும் மாணவர்களும் போதை பொருளுக்கு அடிமையாகிவிட்டதாக கூறினார்.
மேலும் அவர், “பள்ளிகளுக்கு அருகிலேயே போதை பொருட்கள் சகஜமாக விற்கப்படுகின்றன. போதை பொருள் பயன்படுத்துபவர்கள் நம்மிடையே இருப்பவர்கள் தான். அதனை விற்பவரும், புழக்கத்தில் விடுபவரும் நம்மிடையே இருப்பவர்கள் தான். ஆக நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் மட்டுமே போதை பொருட்களின் பயன்பாட்டை தடுக்க முடியும். மாற்றத்தை கொண்டு வர முடியும்” என கூறினார்.
“இது சீரியஸான விஷயம், போதைப்பொருட்களில் ஆர்வத்தை காட்டுவதற்கு பதிலாக இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் ஆர்வத்தை செலுத்த வேண்டும். பெற்றோர்தான் இளைஞர்களின் நண்பனாக இருக்க வேண்டும். போதை பொருள் பயன்படுத்தும் இளைஞர்கள் மகிழ்ச்சி, சோகம் என எல்லா தருணங்களிலும் அதனை பயன்படுத்துவதாக கூறுகின்றனர். எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை கவனித்து நண்பர்களாக வழிநடத்த வேண்டும்” என கார்த்தி வலியுறுத்தினார்.