சென்னை: முனிவேலன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஹாரூன் இயக்கியுள்ள படம், வெப். இப்படத்தில் நட்டி, ஷில்பா மஞ்சுநாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் நட்டி, இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், கே.ராஜன், தனஞ்செயன், கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே. ராஜன், ''இந்த மேடை அலங்கார, கலர்ஃபுல் மேடை தான். அது உண்மை. நடிகைகள் அமர்ந்திருப்பதை மட்டும் அழகாக பார்க்கவில்லை. அதிசயித்து பார்த்தேன். அவர்கள் பேசிய தமிழ், மிகவும் அழகாக இருந்தது. பெண்கள் அடிமைகள் இல்லை. தெய்வத்துக்குச் சமமானவர்கள். அவர்களுக்கான முதல் மரியாதையை குடும்பத்தில் ஒவ்வொருவரும் தர வேண்டும்.
இந்தப் படக் கதையை பற்றி கேள்விப்பட்டேன். போதைக்கு அடிமையாகும் பெண்கள். கேட்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இன்றைக்கு ஒவ்வொரு தமிழ் குடும்பத்தையும் காப்பாற்றுபவர்கள், பெண்கள் தான். 60 சதவீத ஆண்கள் சரியாக பொறுப்போடு இருக்கிறார்கள். 40 சதவீத ஆண்கள் குடிக்கு அடிமையாகி பெண்களை அடிப்பது, கேடுகள் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த மாதிரி கதையை எடுத்து பெண்கள் கெட்டுப் போனால், நாடு என்ன ஆகும் என்பதை த்ரில்லராக செய்திருக்கிறார்கள்'' என்று கூறினார்.
பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா, ''நான் தமிழுக்கு அடிமை. கதாநாயகி பேசிய தமிழுக்கு நமஸ்காரம். நட்டியுடன் 3 படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளேன். முதல் படத்தின் கம்போசிங் மும்பையில் நடந்த போது அவர் நன்றாகப் பார்த்துக் கொண்டார்.
எல்லா இயக்குநர்களும், விஷனோடு (என் படம் இப்படித்தான்) இருக்க வேண்டும் என இருக்கிறார்கள். அதில் சமீபத்தில் மிஷ்கினிடம் வேலை செய்தேன். முன்னாடியே இது தான் எடுக்க வேண்டும் என்று தெளிவாக இருப்பார். இந்தப் படத்தின் இயக்குநர் ஹாரூனும் அப்படித்தான். ஹாரர் படத்துக்கு இசையமைப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்'' என்றும் படத்தைப் பாராட்டிப் பேசினார்.
இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசும்போது, ''நட்டி திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு படித்து வந்தாலும் நடிகராகி, நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இப்போது படங்கள் இயக்க இயக்கம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நிறைய அவமானங்களை சந்தித்து தான் இயக்குநர் ஆனோம். இன்னமும் எனது படங்கள் தான் எனக்கு மரியாதை. நான்கு பேர் பாராட்டுவார்கள். இல்லை திட்டுவார்கள்.
கார்த்திக் ராஜா ஜீனியஸ். ஒரு முறை காரில் சென்று கொண்டு இருக்கும் போது சின்னக் கவுண்டர் கதையை கேட்டு இளையராஜா தூங்கிவிட்டார். பொன்னுமணி படத்தில் ஒரு பாடல் கம்போஸ் செய்தார் கார்த்திக் ராஜா” என்றார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், ''படத்தின் தயாரிப்பாளர் பேசும் போது சில கோரிக்கைகளை முன்வைத்தார். அவர் சொன்னது போல படத்தின் கதாநாயகி ஷில்பா படத்தின் நிகழ்ச்சிக்கு வர வேண்டும். நீங்கள் கேட்டது முக்கியமான கோரிக்கை. தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் சங்கத்துடன் பேசி முக்கியமான கோரிக்கையாக இதை முன்வைத்தோம்'' என்றார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் நட்டி என்கிற நட்ராஜ், ''நிறைய பேருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும் என்று தான் நினைக்கிறேன். இந்தப் படத்தில் முக்கியமான ஒன்று பின்னணி இசை. அதை கார்த்திக் ராஜா அழகாக செய்திருக்கிறார். அந்த 40 நாட்கள் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. மறக்க முடியாத, நல்ல அனுபவம்'' என்று கூறினார்.
இதையும் படிங்க: jujubee: ஜெயிலர் படத்தின் 3வது சிங்கிள் இன்று மாலை வெளியாகிறது!