சென்னை: எஸ்.ஜே.சூர்யா தயாரிப்பில் ராதாமோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி உள்ள பொம்மை திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாடலாசிரியர் மதன் கார்க்கி மேடையில் பேசுகையில், ”இயக்குனர் ராதாமோகன் வெவ்வேறு கதைக் களத்தில் படங்களை இயக்கக் கூடியவர். இவருடைய படங்களில் இயல்பு தன்மை அவருடைய எல்லா வசனத்திலும் இருக்கும். எஸ்.ஜே.சூர்யாவின் இத்தனை ஆண்டு உழைப்பு படங்களில் தெரிகிறது. எது உண்மையான உலகம், பொய்யான உலகம் என இந்த படத்தில் அருமையாக நடித்துள்ளார். படத்தில் வரும் முதல் முத்தம் என்ற பாடலை நானும் எஸ்.ஜே சூர்யாவும் 3 மணிநேரம் ஜூம் காலில் பேசி உருவாக்கினோம். நாங்கள் அப்போது பேசியதை சென்சாரில் கேட்டால் பாடலை தடை செய்து விடுவார்கள்” என்றார்.
நடிகை ப்ரியா பவானி சங்கர் மேடையில் பேசுகையில், “நான் மிகவும் ஆசைப்பட்டு நடித்த படம். எப்போது திரைக்கு வரும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். ஒரு வழியாக ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது. இது 200% ராதா மோகன் படம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ராதா மோகன் மிகவும் தன்மையான மனிதர் என்றவர் எஸ் ஜே சூர்யா உடன் முந்தைய படத்தில் ஹீரோ மட்டும் தான். இந்த படத்தில் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். அவர் நடிப்பதை அருகில் இருந்து பார்ப்பதே ஒரு அனுபவம் தான்” என்றார்.
நடிகர் எஸ்.ஜே.சூர்யா மேடையில் பேசுகையில், “இந்த செய்தியாளர் சந்திப்பே நன்றி கூறுவதற்கு தான். படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது. ராதாமோகன் இந்த கதையை சொல்லும் போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒருவருக்கும் பொம்மைக்கும் காதல் என்பது கேட்கவே புதிதாக இருந்தது. வெளிநாட்டில் பொம்மையை கல்யாணம் செய்து வாழ்ந்து வருகிறார்கள். இதை அழகான காதல் கதையாக மாற்றி உள்ளார் ராதாமோகன். படத்தில் கதாநாயகி முதலில் ப்ரியா கிடையாது.
ஆனால் இவர் தான் ரியல் பொம்மை மாதிரியே இருக்கிறார். குறிப்பாக இயக்குனர் படமாக்கிய போது பிரியா பவானி சங்கரை பார்த்து மிரண்டுபோனார். இதற்காக இயக்குனர் பயிற்சி வகுப்புகள் எல்லாம் நடத்தினார் அதுவும் படத்திற்கு உதவியாக இருந்தது” என்றார்.
மேலும் பொதுவாக நான் அடுத்தவர்கள் பணியில் குறுக்கிட மாட்டேன் ஆனால் இயக்குனர் கேட்டுக்கொண்டதால் 'முதல் முத்தம்' பாடலுக்கு கார்கியுடன் பணியாற்றினேன். இந்த படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. மேலும் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டம் உள்ளது. இப்படி பல வழிகளில் படத்தை கொண்டு சேர்க்க திட்டத்தோடு இருந்தோம். அப்படி இருக்கையில் முழு படத்தையும் எடிட்டர் ஆண்டனி காண்பித்தார். அப்போது ஒரு 12 நிமிடம் கொஞ்சம் குறையாக இருந்தது. அதை நீக்கிவிட்டால் படம் வேகமாக இருக்குமே என எண்ணி அதை நீக்க சொன்னேன்.
'காக்க காக்க' படத்தில் இருந்து 'ரோபோ' படம் வரையில் பணியாற்றியவன் நான் சொல்லுகிறேன். இந்த படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் என்றார். அவர் அப்படி சொன்னதும் அதை என்னால் உணர முடிந்தது. பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா பிரமாதமாக செய்துள்ளார். அவருடைய பின்னணி இசைக்காகவே இந்த படத்தை பார்க்கலாம். இந்த படத்திற்காக கடைசி நான்கு ஐந்து நாட்கள் தூங்கவில்லை அனைவரையும் மறந்துவிட்டேன் என்றார்.
இந்த பொம்மை திரைப்படம் மறக்க முடியாத மைல்கல்லாக இருக்கும். பொம்மை எனக்கு முக்கியமான படம். ஒரு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக எனது பயணத்தை தொடங்கினேன். நான் மீண்டும் மீண்டும் சினிமாவில் காசை போட்டுக் கொண்டிருக்கிறேன். மீண்டும் இந்த படத்தில் மொத்த பணத்தையும் போட்டுள்ளேன். உங்கள் கையில் படத்தை கொடுக்கிறேன். நீங்கள் ஆதரித்தால் அடுத்தடுத்து அனேக திட்டங்கள் உள்ளது” என கூறினார்.
பின் செய்தியாளர்கள் கேள்விக்கு எஸ்.ஜே.சூர்யா பதிலளிக்கையில், ”பொம்மை மட்டும் க்ளிக் ஆகி விட்டால், இந்த கதை சீனா தாண்டி செல்லும். இந்த படம் ஒரு யுனிவர்சல் கதைக்கருவை கொண்டது. ப்ரியாவுக்கு எங்கள் குடும்ப முகம் உள்ளது. இந்த படம் வெற்றியாகி என்னை மிகப்பெரிய ஹீரோ ஆக்கி விட்டால், எனது திருமணத்தை பற்றி யோசிக்கலாம் என்றார். அஜித் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு உங்களை வாய்ப்பு அளித்தால் இயக்குவீர்களா என்ற கேள்விக்கு, அஜித் அழைத்தால் நான் செல்லாமல் இருப்பேனா. அவர் அழைத்தால் கண்டிப்பாக அவரோடு பணியாற்றுவேன்” என்றார்.
இதையும் படிங்க: நாளை ரிலீஸ் ஆகிறது மாவீரன் படத்தின் இரண்டாவது சிங்கிள்!