சென்னை: அயன் முகர்ஜி இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜூனா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் சென்னை சத்யம் திரையரங்கில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர் நாகார்ஜுனா, ரன்பீர் கபூர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, ”நான் இயக்குநராக இங்கு வரவில்லை. புதிய அவதாரத்தில் வந்துள்ளேன். இந்த படத்தின் பிரசென்டராக வந்துள்ளேன். இந்த ஆண்டின் அதிக செலவில் உருவான படம் இது. இந்த ஆண்டு என்று சொல்ல முடியாது. பல ஆண்டுகளாக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறோம்.
இது சாதாரணமான விஷயம் கிடையாது. ஹீரோவிற்குப் பவர் கொடுப்பது சாதாரண விஷயம் கிடையாது. கமர்சியல் படமாக இதை உருவாக்கி உள்ளோம். இந்தப் படத்திற்கு 8 ஆண்டுகள் கொடுத்தாலும் பத்தாது. இறுதி நேரத்தில் கூட சில மாற்றம் செய்யலாம் என இயக்குநர்களுக்குத்தோன்றும்” என்றார்.
நடிகர் நாகார்ஜூனா, ”நீண்ட ஆண்டுகள் கழித்து நான் எனது பிறந்த ஊருக்கு வந்துள்ளது போன்ற உணர்வு உள்ளது. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எப் மற்றும் எனக்குப்பிடித்த நடிகர் கமலின் விக்ரம் திரைப்படம் வரிசையில் பிரம்மாஸ்திரம் படமும் வந்துள்ளது. இது தான் என்னுடைய முதல் 3டி படம்” என்றார்.
ஸ்பீக்கர் பிரச்னை காரணமாக ரன்வீர் பேசியது கேட்கவில்லை. அதனால் ரன்வீர் மேடையில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் தொடர்ந்து பேசிய ரன்பீர், ”இங்கு வருவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அமிதாப் பச்சன், நாகார்ஜூனா உள்ளிட்ட சிறந்த நடிகர்கள் உடன் நடித்தது எனக்கு ரொம்ப சிறப்பாக உள்ளது” என்றார்.
வீடியோ மூலமாக கலந்துகொண்டு பேசிய ஆலியா பட், ”சில காரணங்களால் என்னால் இங்கு வர முடியவில்லை. ஒரு நல்ல கன்டென்ட்டை எடுத்து வந்துள்ளோம். பிரம்மாஸ்திரம் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாக உள்ளது. 10 ஆண்டுகள் இந்தப் படத்திற்காக உழைத்துள்ளோம். சமீபத்தில் வெளியான பல படங்கள் இந்தியாவைக் கடந்து வெற்றி பெற்றது. மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்கள் பார்த்தேன். சிறப்பாக இருந்தது. அனைவரும் இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்”என்றார்.
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த ராஜமௌலி, ”நான் பிறப்பால் ஒரு தெலுங்கராக இருந்தாலும் தென்னிந்திய மக்கள் எனக்கு நல்ல வரவேற்பும், ஆதரவும் அளித்தனர். குறிப்பாக தமிழ்நாடு மக்கள் மாற்று மொழிப்படங்களாக இருந்தாலும் கதையம்சம் கண்டு கொண்டாடுகின்றனர். இதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது.
நான் பாகுபலி படம் பண்ணும்போது 5 ஆண்டுகள் அதற்காக உழைத்தேன். ஆனால், இப்படத்தின் இயக்குநர் இதற்காக 10 ஆண்டுகள் உழைத்துள்ளார். அதற்காக, இப்படத்தை நான் வெளியிட விரும்பினேன். கருத்து சொல்வதற்காக இல்லை. என் படத்திலேயே நான் கருத்து சொல்லமாட்டேன்.
நான் ஏற்கெனவே சொன்னது தான். ரஜினிகாந்த் உடன் படம் பண்ண எல்லா இயக்குநர்களுக்கும் விருப்பம் தான். எனக்கும் அவரை வைத்து படம் இயக்க ஆசை தான். அதற்கான நேரம் அமைய வேண்டும். இன்னும் சொல்லப்பட வேண்டிய கதைகள் இன்னும் இருக்கிறது” என்றார்.
செய்தியாளர்களின் கேள்விக்குப்பதிலளித்த ரன்பீர் கபூர், ”ராஜமௌலி எனது படத்தை தமிழில் வெளியிடுவது எனக்குப் பெருமையாக உள்ளது. சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் நான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இதுகுறித்து ஆலியாவிடம் சொன்னபோது சிரித்தார். யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
2013ஆம் ஆண்டில் இருந்து இப்படத்திற்கு உழைத்துள்ளோம். இயக்குநர் அயனின் மிகப்பெரிய கனவின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். எப்போது படம் ரிலீஸ் ஆகும்போதும் எதிர்பார்ப்பும் பதற்றமும் இருக்கும். பத்து ஆண்டுகள் இதற்காக உழைத்துள்ளபோது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதையெல்லாம் கடந்து ரசிகர்கள் தான் ராஜா என்பதை நான் உணர்வேன்.
படம் நன்றாக இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது ரசிகர்களுக்கான படம். இது இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டேன். ரஜினிகாந்த் என்றால் அவரது ஸ்டைல்தான் நினைவுக்கு வரும்.
கண்ணாடியைத்திருப்பி போடுவது, சிகரெட்டை தூக்கி எறிந்து வாயில் பிடிப்பது எல்லாம் பார்க்காமல் நாம் சிறு வயதைக் கடந்து வந்திருக்க மாட்டோம். எனது அப்பா கமல்ஹாசன் படத்தில் நடித்துள்ளார். அப்புராஜா திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அஜித்தை திரையில் மட்டும்தான் பார்க்க முடியும். அதனைத்தாண்டி அவரது ஒரு புகைப்படம்கூட வெளியில் பார்க்க முடியாது. மிகப்பெரிய மர்மம் அது. விஜயின் மாஸ்டர் படம் பார்த்தேன். சிறந்த மனிதர். பாட்டு, நடனம் ஆகியவற்றை மிகவும் ரசித்தேன்”என்றார்.
செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த நாகார்ஜூனா, ”நான் தமிழில் ஏற்கெனவே மூன்று படங்கள் நடித்துள்ளேன். இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததால் இதில் நடித்தேன். எனது மனைவி அமலா படமும் செப்டம்பர் 9ஆம் தேதி வெளியாகிறது. இது ஆரோக்கியமான போட்டிதான்” என்றார்.
இதையும் படிங்க: மீண்டும் மிரட்ட வரும் அவதார் படத்தின் முதல் பாகம்... ரிலீஸ் தேதி அறிவிப்பு