சென்னை: இயக்குனர் வம்சி இயக்கத்தில் 2023 பொங்கல் தினத்தன்று வெளியாக உள்ள திரைப்படம், வாரிசு. இந்த திரைப்படத்தை தெலுங்கு சினிமாவில் திரையிட எதிர்ப்பு கிளம்பியது. அதனைத்தொடர்ந்து சமீபத்தில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்தார்.
அப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் காலை தொட்டு மக்கள் மன்ற நிர்வாகிகள் வணங்கினர். இது பெரும் சர்ச்சையானது. தொடர்ந்து விஜய் வரை சென்ற இந்த பஞ்சாயத்தால், புஸ்ஸி ஆனந்தை அழைத்து கடிந்துகொண்டார் விஜய்.
இது ஒருபுறம் இருக்க, சென்னை பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் அனுமதியின்றி யானைகள் பயன்படுத்தப்படுவதாக கூறி தனியார் தொலைக்காட்சி ஒன்று அதனை படம்பிடிக்க முயன்றது. அப்போது காவல் துறையினர் இடையே பிரச்னை ஆனது. இப்படி விஜய்யை சுற்றி ஏராளமான சர்ச்சைகள், பிரச்னைகள் உலா வருகின்றன. ஆனால் இது ஒன்றும் விஜய்க்கு புதிதல்ல.
கீதை - புதிய கீதை ஆன கதை: முதன்முதலாக சர்ச்சையில் சிக்கி ஆரம்பப்புள்ளியை வைத்த படம், புதிய கீதை. 2003ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்கு முதலில் ‘கீதை’ என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் கீதை என்ற பெயர் வைக்கக் கூடாது என இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்பிறகு ‘புதிய கீதை’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
சீறாத ‘சுறா’வால் பாதிக்கப்பட்ட காவலன்: 2010ஆம் ஆண்டு வெளியான ‘சுறா’ படம் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது. இதனால் 2011ஆம் ஆண்டு வெளியாக இருந்த ‘காவலன்’ படத்தை திரையிட முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் மறுத்து விட்டனர்.
மேலும் சுறா படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை வழங்க வேண்டும் என விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதற்கு விஜய் தரப்பு அமைதி காத்தது. பின்னர் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் காவலன் படம் வெளியானது.
இஸ்லாமியர் சர்ச்சையில் பாயாத துப்பாக்கி: 2012ஆம் ஆண்டு இயக்குனர் ஏஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘துப்பாக்கி’ திரைப்படமும் சர்ச்சையில் சிக்கியது. இது படம் வெளியாகும் முன்பு அல்ல; படம் வெளியான பின்பு. படத்தை பார்த்த இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் இறங்கினர்.
இப்படம் இஸ்லாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளது என்றும், இப்படம் தங்களை இழிவுபடுத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். பின்னர் விஜய் மற்றும் படக்குழுவினர் தமிழ்நாடு அரசு மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து இப்பிரச்னை ஓய்ந்தது.
தலைப்பெழுத்தை மாற்றிய தலைவா: 2013ஆம் ஆண்டு வெளியான ‘தலைவா’ படம் கொடுத்த பிரச்னை அளவுக்கு வேறு எந்த படமும் விஜய்க்கு பிரச்னை கொடுக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் தலைப்புடன் ‘டைம் டூ லீட்’ (Time To Lead) என்ற வசனம் வைக்கப்பட்டிருந்தது.
அது விஜய் அரசியலுக்கு வரவுள்ளார் என்ற பேச்சு எழத் தொடங்கிய நேரம். எனவே இப்படத்தை வெளியிட முடியாமல் சிக்கல் நேர்ந்தது. அதுமட்டுமின்றி படம் வெளியானால் திரையரங்குகளில் வெடிகுண்டு வைக்கப்படும் என்று மர்ம கடிதம் வந்ததாக கூறி தமிழ்நாடு அரசு, படத்தை வெளியிட தடை விதித்தது. மேலும் தமிழ்நாட்டில் வெளியாகும் முன்பே இதர மாநிலங்களில் இப்படம் வெளியானது.
அப்போது இப்படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் தமிழ்நாட்டிலிருந்து கேரளா சென்றதெல்லாம் ஒரு தனிக்கதை. இறுதியில் வசனம் நீக்கப்பட்டு, வெறும் ‘தலைவா’ என்ற பெயருடன் 11 நாட்கள் கழித்து தமிழ்நாட்டில் படம் வெளியானது. அதேநேரம் படமும் தோல்வியடைந்தது. படம் வெளியானதும் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து வீடியோவும் விஜய் வெளியிட்டார்.
இலங்கை வழியாக பாய்ந்த கத்தி: இப்படத்தின் மூலம்தான் லைகா நிறுவனம் தமிழ் சினிமா தயாரிப்பில் நுழைந்தது. இந்த நிறுவனத்தின் தலைவரான சுபாஸ்கரன், ராஜபக்சேவின் நண்பர் என்றும், அதனால் கத்தி படத்தை தமிழ்நாட்டில் வெளியிடக்கூடாது என்றும் கூறி பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதன் பிறகு தயாரிப்பு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
ரெய்டால் பதுங்கிய புலி: 2015ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி வெளியான படம், புலி. இப்படம் ரிலீசுக்கு முன்தினம் திடீரென சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், நடிகர் விஜய் ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பட வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது.
விடிய விடிய நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதனால் ரிலீஸ் தினத்தன்று சிறப்புக்காட்சி மற்றும் காலை காட்சிகள் ரத்தாகின. இதனால் விஜய் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் ரகளையில் ஈடுபட்டனர். திரையரங்குகளும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் விஜய் நேரடியாக களத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
பின்னர் நிதி பிரச்னைக்கு விஜய்யே பொறுப்பேற்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து படம் வெளியானது. ஆனாலும் இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை கொடுத்தது. மேலும் இப்படம் பெரும் தோல்வியைக் கண்டது. இன்று வரையிலும் விஜய் திரைப்பயணத்தில் மறக்க வேண்டிய படமாக 'புலி' அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
விலையில் விரட்டிய தெறி: 2016ஆம் ஆண்டு வெளியான 'தெறி' படத்திற்கு, டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்கக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால் 'தெறி' படம் செங்கல்பட்டு பகுதிகளில் வெளியாகவில்லை. இருப்பினும் படம் வெளியாகி வெற்றி பெற்றது.
சென்சாரில் நிறுத்தப்பட்ட மெர்சல்: 2017ஆம் ஆண்டு ‘மெர்சல்’ திரைப்படம் சென்சார் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. வெளியாவதற்கு முதல் நாள் வரை சென்சார் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி இப்படம் விலங்குகள் நல வாரிய கடிதம் என பல்வேறு பிரச்னைகளைச் சந்தித்தது. கர்நாடகாவிலும் இப்படத்திற்கு எதிர்ப்பு நிலவியது.
தமிழ்ப் படங்களை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஜிஎஸ்டி தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விஜய் குறித்த ஹெச்.ராஜாவின் பதிவு உள்ளிட்ட பிரச்னைகளால் சாதாரண வெற்றி பெற வேண்டிய படம் மெகா ஹிட்டடித்தது.
புகையிலும் கசியாத சர்கார்: இதன் பின்னர் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'சர்கார்' படம் கதைத்திருட்டு, புகைப்பிடிக்கும் காட்சிகள், அரசியல் வசனங்கள் ஆகியவற்றால் சிக்கலில் மாட்டித் தவித்தது. இவை அனைத்தையும் கடந்து இப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.
அதிமுகவை உஷ்ணமாக்கிய பிகில்: 2019ஆம் ஆண்டில் வெளியான இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய “எவன எங்க உட்கார வைக்க வேண்டுமோ... அவனை அங்கே சரியா உட்கார வைத்தீர்கள் என்றால் மெடல் தானாக வந்து சேரும்” என்ற பேச்சு மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியது.
இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. எனவே விஜய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து கருத்து தெரிவித்தும் வந்தனர். மேலும் இந்த விழாவின்போது காவல் துறையினர் ரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். அதேநேரம் படத்தின் போஸ்டரில் இறைச்சி வெட்டும் மரக்கட்டைகள் மீது விஜய் கால் வைத்திருப்பது போன்று காட்சி இருந்தது.
இது வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பை உண்டாக்கியது. அவர்கள் விஜய்க்கு எதிராக போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுமட்டுமின்றி படத்தின் வசூல் தொடர்பாக விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது அரசியல் சூழ்ச்சி என விஜய் ரசிகர்கள் கூறி வந்தனர்.
ரெய்டில் ரவுண்டு கட்டிய மாஸ்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்றது. அப்போது மீண்டும் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர். கரோனா தளர்வுக்கு பிறகு வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. ரசிகர்களை மீண்டும் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு படையெடுக்க வைத்தது.
மீண்டும் இஸ்லாமியர் சர்ச்சையில் சறுக்கிய விஜய்: இந்த ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இப்படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களை இழிவுபடுத்தி விட்டதாகவும் கூறி எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி இப்படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். அதே தேதியில் கன்னட சினிமாவான கேஜிஎஃப் 2 வெளியாக இருந்தது. எனவே ஒருநாள் முன்னதாக பீஸ்ட் படம் வெளியானது. ஆனால் இப்படம் தோல்வி அடைந்தது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் கேலிக்குள்ளானது.
வான்டடாக சிக்கிய வாரிசு: தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் முதல் தெலுங்கு படம், வாரிசு. தெலுங்கில் சங்கராந்தியை ஒட்டி சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகியோரது படங்கள் வெளியாக உள்ளன. எனவே அவர்களுக்குத்தான் அங்கு திரையரங்குகள் முன்னுரிமை அளிக்கும்.
விஜய் படத்தை வெளியிட மாட்டோம் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஆனால் இப்பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு எட்டப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க, சென்னை இவிபி பிலிம் சிட்டியில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அப்போது உரிய அனுமதியின்றி யானைகள் பயன்படுத்தப்படுவதாக கூறி தனியார் தொலைக்காட்சி ஒன்று அதனை படம்பிடிக்க முயல போலீஸ் பிரச்னை ஆனது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் முறையான அனுமதி பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியம், தயாரிப்பு தரப்புக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இப்படி வாரிசு வான்டடாக வந்து சிக்கியுள்ளது. இப்படி அடுத்தடுத்து வெளியாகும் விஜய் படங்களுக்கு ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பிரச்னை வந்து கொண்டே இருக்கிறது. இருப்பினும், பிரச்னை வந்தால்தான் விஜய் படம் மெகா ஹிட் அடிக்கும் என்ற வழக்கமும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது.
ஆனால், விஜய் தரப்பில் பல்வேறு நிலைகளில் பிரச்னைக்குரிய காரணிகள் தடுக்கப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'வாரிசு' பட தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ்!