சென்னை: மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த மோகன் (75), மாநகராட்சியில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதன் பிறகு சினிமா மீது உள்ள ஆசையால் சென்னை வந்த மோகன், பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கிலி முருகன் கதை எழுதி, கங்கை அமரன் இயக்கிய ’கும்பக்கரை தங்கையா’ என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
கும்பக்கரை தங்கையா படத்தில் பிரபு, கனகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். நடிகர் மோகன், அதன் பிறகு பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகளில், இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி, வீரன் ஆகிய படங்கள் நடிகர் மோகனுக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது. கடைசியாக ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக நடித்த வீரன் படத்தில் நடித்திருந்தார்.
சினிமா மட்டுமில்லாமல், பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். சரவணன் மீனாட்சி, ஈரமான ரோஜாவே ஆகிய சின்னத்திரை தொடர்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில், நடிகர் மோகன் இன்று காலை திடீர் நெஞ்சு வலி காரணமாக, சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்தார்.
இவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற உள்ளது. இவருக்கு சிவக்குமார் என்ற மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். மோகனின் மனைவி, கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்தார். இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பருத்திவீரன் பட விவகாரம்; தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு இயக்குநர் அமீர் சரமாரி கேள்வி!