சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். ரசிகர்கள் இவரை அன்போது 'தல' என அன்போது அழைத்து வந்த நிலையில் கடந்த ஆண்டு அறிக்கை வாயிலாக தன்னை யாரும் தல என அழைக்க வேண்டாம் என அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
நடிகர் அஜித் தனது இளமைப் பருவத்திலிருந்தே ரேஸ் கார், பைக் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த அவர் மும்பை, சென்னை, தில்லி போன்ற இடங்களில் நடந்த கார் ரேஸ்களில் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளார். மேலும் சர்வதேச அரங்கில் ரேஸ்களில் பங்கேற்கும் இந்தியர்களில் ஒருவர் என்றும் ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றவர் அஜித்.
எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை தனது நடிப்பால் உருவாக்கி வைத்துள்ளார். அஜித் சிறந்த மனிதர், ரசிகர்கள் மனதில் 'தல' என்று அன்போடு நிலைத்திருப்பவர் அஜித் குமார் ஆவார். அதனால் தல என்பதை குறிக்கும் விதமாக ஓவியர் செல்வம் கைகள் பயன்படுத்தாமல் சிறுகம்பியில் வளையம் மாதிரி செய்து அதில் ப்ரஷ் வைத்துக் கொண்டு தன்னுடைய தலையில் மாட்டிக் கொண்டு பின் தன் தலையை அசைத்து அசைத்து நீர் வண்ணத்தில் ப்ரஷ் தொட்டு 15 நிமிடங்களில் 'தல' படத்தை தலையால் வரைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்.
ஓவியர் செல்வம், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர். இந்த ஓவியத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் அனைவரும் ஓவியர் செல்வத்தை பாராட்டி வருகின்றனர். முன்னதாக ஓவிய செல்வம் கடந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் அஜித்தின் ரெட் பட லுக், வலிமை பட லுக், துணிவு பட லுக் ஆகியவற்றை யூஸ் அண்ட் த்ரோ கிளாசில் வரைந்து துணிவு படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்திருந்தார்.
டிசம்பர் மாதம் நடிகர் ரஜினியின் பாபா பட புகைப்படத்தை அந்த படத்தில் அவர் காட்டுவது போலவே கைகளை வைத்துக் கொண்டு கைகளையே ப்ரஷ்ஷாக பயன்படுத்தி வரைந்திருந்தார். மேலும் இவர் கடந்த ஆண்டு நடிகர் அஜித்தின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக உடல் முழுவதும் கயிற்றைக் கட்டிக் கொண்டு கயிற்றின் ஒரு முனையை வாயில் கவ்விக் கொண்டு நடிகர் அஜித்தின் புகைப்படத்தை வரைந்து வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஓவியர் செல்வம், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் என பலரின் புகைப்படங்களையும் வித்தியாசமான முறைகளில் வரைவதை வழக்கமாக கொண்டுள்ளார். தன்னுடையை திறமையை பயன்படுத்தி அவர் ஒவ்வொரு பிரபலங்களின் பிறந்தநாளிற்கும் வித்யாசமான முறைகளில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.