சென்னை: 'தெனாலிராமன்', 'எலி' படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் 'இறுகப்பற்று' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தினை 'மான்ஸ்டர்', 'டாணாகாரன்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இப்படம் அக்டோபர் 6ம் தேதி திரையில் வெளியாகிறது.
நடிகர் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ மற்றும் சானியா உள்ளிட்ட நடிகர்கள் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் 'இறுகப்பற்று' படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (செப் 26) சென்னை வடபழனியில் நடைபெற்றது.
அப்போது நடிகர் விதார்த் மேடையில் பேசுகையில், "ஒரு நல்ல படத்தில் இணைந்தது சந்தோசமாக இருக்கிறது.என் திருமணத்தின் போது, அழைப்புக்கு எல்லோரிடமும் பத்திரிகை கொடுக்க சென்ற போது, எல்லோரும் அவருடைய திருமண அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். எனக்கு பயம் வந்து விட்டது. அந்த மாதிரி நேரத்தில் தான் இயக்குநர் இந்த படத்தின் கதையை கொடுத்திருப்பார். எனக்கு வந்த ஒரு சில கதைகள், வேறு இடத்துக்கு மாறி ஹிட் ஆகி இருக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அது கூட எனக்கு தெரியாது.இந்த படத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்று நினைத்து கொண்டே இருந்தேன். இந்த ஸ்கிரிப்ட் நான் படிக்க ஆரம்பித்ததிலிருந்தே, என்னை நான் புரிந்து கொள்ள முடிந்தது. கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் என்னை நான் புரிந்து கொண்டேன் என்பதே உண்மை. இந்த படம் பார்க்கையில் ரசிகர்கள் கண்டிப்பாக ஏதாவது ஒன்றை எடுத்து செல்வீர்கள்" என்றார்.
பின்னர் பேசிய நடிகர் விக்ரம் பிரபு, "இப்படியொரு கதாபாத்திரம் செய்ய வேண்டும் என்று எல்லா நடிகர்களும் நினைப்பார்கள். அப்படித்தான் நானும் நினைத்தேன். எப்போதுமே கதை தான் கிங். அக்டோபர் 6 என் மனைவி பிறந்தநாள். இந்த படம் பண்ணுனதே உனக்காக தான் என்று அவரிடம் கூறி விட்டேன். படம் அக்.6-ம் தேதி வெளியாகிறது. படம் பார்த்து ஆதரவு கொடுங்கள்” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசிய படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன், "இந்த மேடையில் 8 வருடம் கழித்து ஏறுகிறேன். 'எலி' பட வெளியீட்டின் போது, மயான அமைதி இருந்தது. பாலா, மிஷ்கின் படங்கள் போன்ற ஒரு அமைதி. சரியான தூக்கம் இல்லை. அந்த அமைதி என்னை சாகடித்து விட்டது. எப்படியாவது நல்ல படத்தை எடுத்து விட வேண்டும் என்று ஒரு வருடமாக முயற்சித்தேன், முடியவில்லை. அதில் அவ்வளவு அவமானங்கள். நான் ஓடி ஒளிந்து விட்டேன் என்று கூறினார்.
மேலும், மீண்டும் ஒரு தயாரிப்பாளரை பார்க்கும் போது அவமானம் வந்து விடுமோ என்று பதறி விட்டேன். என்னை பின்னால் இருந்து முன்னேற்றி விட்டது பிரபாகர் உள்பட 3 பேர் தான். வேண்டாம் என்று விலகி செல்பவரை படம் பண்ணுங்கள் என்று சினிமா அழைக்கிறது என்றால் கண்டிப்பாக நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை வந்தது. கத்தி, சண்டை எதுவும் இல்லாமல் ஒரு படம் எடுத்துள்ளேன். நான் கத்தி எடுக்க வேண்டுமா? வேண்டாமா? என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
தி கேப்: முன்னதாக படக்குழு சார்பில் 'தி கேப்' என வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பல்வேறு தம்பதிகள் இடம் பெற்றிருந்தனர். அவர்களிடம் அவர்களின் திருமண வாழ்க்கை சார்ந்து 21 கேள்விகள் கேட்கப்பட்டது. அந்த கேள்விகளுக்கான அவர்களின் பதிலும், இருவரும் திருமண உறவில் எவ்வளவு விலகியிருக்கிறார்கள் என்பதை காட்டும் விதத்திலும் நேர்த்தியாக வீடியோ உருவாக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்த நிலையில் சமுக வலைதளத்தில் வைரல் ஆனது.
இதையும் படிங்க: லியோ படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை - தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!