சென்னை: விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருளானந்த், மாத்யூ அருளானந்த் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாடகர் ஆண்டனி தாசன், "ரியோவுக்காக இரண்டாவது முறை பாடியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் பாடலைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் சித்து குமாருக்கும், பாடலாசிரியர் கிரண் வரதனுக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் பாடல் நிச்சயம் பிடிக்கும்" என்றார்.
இயக்குநர் சீனு ராமசாமி பேசும் போது, ”இந்தப் படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குநர் ஹரிஹரன் ராம் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளர் அருளானந்த் மட்டுமே எனக்கு தெரியும். அவர் தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு ஜோ படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன்.
![ஜோ திரைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-11-2023/tn-che-03-joe-rio-script-7205221_21112023152740_2111f_1700560660_828.jpg)
ஜோ திரைப்படம் அவ்வளவு அருமையான உள்ளது. படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் 'ஜோ'.
இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன். ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது, வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்" என்றார்.
![ஜோ திரைப்படம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/21-11-2023/tn-che-03-joe-rio-script-7205221_21112023152740_2111f_1700560660_254.jpg)
நடிகர் புகழ், "படத்தில் நடித்தோமோ போனோமோ என்றில்லாமல் உங்கள் பட நிகழ்வுக்கு நீங்களே ஹோஸ்ட் செய்து கொண்டிருப்பது பெரிய விஷயம். உன்னுடைய உழைப்புக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய இடத்தை போய் சேரும்".
சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், "ஒரு படம் பார்ப்பது என்பது ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அருளானந்த் என்னிடம் சொன்னார். 'ஜோ' படத்திற்காக கதாநாயகன் ரியோவில் இருந்து அனைவருமே கடுமையாக மூன்று வருடம் உழைத்துள்ளனர். நவம்பர் 24 தான் வெளியிட வேண்டும் என அவ்வளவு ஆசையோடு கேட்டார். பிடித்தவர்களுக்காக திருப்தியாக நான் இந்த படத்தை செய்து கொடுத்துள்ளேன்”.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, "இந்த படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர் போட்டு காண்பித்த போது நன்றாக இருக்கிறது எனது தோன்றியது. புரமோஷன் பாடலுக்காக யுவன் வந்த போது படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தான் கமிட் செய்த புராஜெக்ட்டை மிகவும் விரும்பி, முழு அர்ப்பணிப்பு கொடுத்து அருளானந்த் செய்துள்ளார். அதற்காகவே இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். 'ஜோ' படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் உங்களை நெகிழ வைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என்றார்.
ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன் ராம், "இந்தப் படத்தின் நிகழ்விற்கு வந்து பெரிய வார்த்தைகள் சொன்ன சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இயக்குநராக இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி.
2015 காலகட்டத்தில் இந்த கதையை ரியோ அண்ணனிடம் சொன்னேன். விடிய விடிய படத்தின் கதையை கேட்டுவிட்டு நிச்சயம் இதை நான் செய்கிறோம் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை இந்த படத்தை தூக்கி சுமந்து கொண்டு உள்ளார். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ”மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல”... நடிகர் மன்சூர் அலிகானுக்கு பாரதிராஜா அட்வைஸ்