சென்னை: நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களிடம் பேசியது ”லியோ படம் நடந்ததற்கு காரணமே மாஸ்டர் தான். விஜய் படம் என்றாலே பிரச்சனை தான்.
முன்பை விட தற்போது விஜய்யுடன் புரிதல் அதிகமாகி இருக்கிறது. மாஸ்டர் படம் வெற்றியானதால் தான் லியோ படம் உருவானது. லியோ டிரெய்லரில் ஆபாச வார்த்தை, லியோ என்ன மாதிரியான படம் என்று காட்டுவதற்கான முயற்சிதான். அந்த ஆபாச வார்த்தை இல்லை என்றாலும் வேறு பிரச்சனை வந்திருக்கலாம். அந்த ஆபாச வார்த்தையை பேசியது நடிகர் விஜய் அல்ல, அந்த கதாபாத்திரம்.
சிறு வயதினரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர் என்பதை உணர்ந்து தான் மியூட் செய்தோம். தியேட்டரிலும் மியூட் செய்யப்பட்டு தான் வரும். அந்த ஆபாச வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று படப்பிடிப்பு தளத்தில் விஜய் கூறினார். அடுத்து ரஜினி படம் இயக்குகிறேன். அதை விட சந்தோஷம் என்ன இருக்கிறது. இப்போதைய சினிமாவின் டிரெண்ட் மாறி வருகிறது. அதை வன்முறை என்று கூற மாட்டேன். ஆக்ஷன் என்றே கூறுவேன். போதைப்பொருள் சமூகம் வேண்டாம் என்று தான் என் படத்தில் காட்டுகிறேன்.
என்னுடைய படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெறுவது வன்முறையை தூண்டுவதற்காக அல்ல. வன்முறை வேண்டாம் என்பதை மக்களுக்கு ஹீரோ மூலம் எடுத்து காட்டுகிறேன். விஜய் மாதிரியான பெரிய நடிகர்கள் சொன்னால் ரசிகர்கள் கேட்பார்கள் என்று தான் மாஸ்டர் படத்தில் குடிகாரன் திருத்துவது போன்ற கதாபாத்திரம் என்றார்.
இசை வெளியீட்டு நிகழ்ச்சி போன்ற வேறு நிகழ்ச்சி பண்ண வேண்டுமா, படம் வெளியிட வேண்டுமா என்று பார்த்தால் படம் வெளியீடு தான் முக்கியம். மலேசியா, துபாயிலும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம். படம் உருவாக்குவதில் எனக்கு அழுத்தம் கிடையாது. படத்தை வெளியிடுவதில் தான் அழுத்தம். படம் எடுப்பது மட்டுமே என் கட்டுப்பாடு. வியாபாரம் என்பது தயாரிப்பாளர் கட்டுப்பாடு. திரையரங்க பிரச்சனைக்கு இரவு 7 மணிக்குள் சுமூக முடிவு வரும் என எதிர்பார்க்கிறேன்.
சியான் விக்ரம் சிறப்பு தோற்றத்தில் லியோவில் நடிக்கவில்லை என்றவர், எனது டிவிட்டர் பயோவில் நான் லியோ என்று இதற்கு முன் போட்டதில்லை. தணிக்கைக்கு பிறகே லியோ என்று இணைத்தேன். அப்படி பார்த்தால் இப்போதே தலைவர் 171 என்பதை இணைத்திருப்பேனே. எப்போதும் தணிக்கை முடிந்த பிறகே எனது படத்தை பயோவில் இணைப்பேன்.
நடிகர் அஜித்தை வைத்து படம் எடுப்பது மிகப் பெரிய ஆசை. ரஜினி வைத்து நான் இயக்க உள்ள திரைப்படத்திலும் நட்சத்திர நடிகர்கள் இருக்கலாம். விஜய் சார் அழைத்தால் கட்டாயம் மீண்டும் படம் பண்ணுவேன். லியோ படத்தின் டிக்கெட்டை ரசிகர்கள் கூடுதல் விலைக்கு வாங்கி பார்க்காதீர்கள். நாளை குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் லியோ படத்தை பார்வையிட உள்ளேன்.
நான் வங்கியில் பணியாற்றும் போது என் குடும்பம் பற்றி யாருக்கும் தெரியாது. அதே போல் தான் சினிமாவில் இருக்கவும் விரும்புகிறேன். குடும்பத்தை சினிமாவிற்குள் கொண்டு வர விருப்பம் கிடையாது. அது தனிப்பட்டதாகவே இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஒரு படத்தை தயாரித்துள்ளேன். அது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என கூறினார்.
இதையும் படிங்க: LCU-வில் லியோ இணைவது உறுதி? - உதயநிதி ஸ்டாலினின் சூசகமான ட்வீட்!