சென்னை: தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர்களில் ஒருவர் மிஷ்கின். இவரது படங்களில் எப்போதும் பின்னணி இசையும், பாடல்ககளும் தனித்துவம் கொண்டதாக இருக்கும். அந்த அளவுக்கு இசையில் ஆர்வம் கொண்ட மிஷ்கின் தற்போது டெவில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார்.
இயக்குநர் மிஷ்கின் இசையில் “டெவில்” திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (நவ் 3) நடைபெற்றது. இப்படத்தை மிஷ்கினின் தம்பியும், சவரக்கத்தி படத்தை இயக்கியவருமான ஆதித்யா இயக்கியுள்ளார். மிஷ்கின் முதல் முறையாக இசையமைக்கும் இப்படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபா ஶ்ரீ ஆகியோருடன் இயக்குநர் மிஷ்கினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் பாலா, வெற்றிமாறன், ஆர்.கே.செல்வமணி, சசி, கதிர், வின்சென்ட் செல்வா, தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, முரளி, எழுத்தாளர் ஜெயமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், “நான் கிறிஸ்துவ குடும்பத்தில் பிறந்தவன் கிடையாது. ஆனால் பைபிளை நிறைய முறை படித்திருக்கிறேன். நானும் சிலுவையில் தொங்குபவன்தான்” என்று டெவில் பாடல் குறித்து அறிமுகம் செய்தார்.
பின் எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில், “உலகத்தில் உள்ள எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்லக் கூடியவன் நான். ஆனால் நான் பேசக்கூடாத ஒரு விஷயம் இருக்கிறது என்றால் அது இசைதான். ஒரு பாமரனாக டெவில் இசையை ரொம்ப ரசித்தேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய மிஷ்கின், “என் தாய், என் முதல் குரு இளையராஜா. அவரிடம் சண்டை போட்டுவிட்டேன். அதனால் தான் நான் இசையமைத்துள்ளேன். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் முன் இது ஒன்றுமில்லை. நான் ஒரு இசையமைப்பாளரே கிடையாது. இளையராஜவை தவிர என் வாழ்க்கையில் இரண்டு குருக்கள். ஒருவர் இயக்குநர் கதிர் மற்றொருவர் வின்சென்ட் செல்வா” என்று அவர்கள் இருவரை மேடைக்கேற்றினார் மிஷ்கின்.
மேடையில் பேசிய இயக்குநர் பாலா, “இளையராஜவ பத்தி மிஷ்கின் சொன்னான். ஆனால், மிஷ்கின் பத்தி இளையராஜா “அவன பத்தி சாதாரணமா எடை போடாதே. அவன் ஒரு இண்டலிஜெண்ட்” என்று சொன்னார். இவன் ஒரு பேய்தான். அதனால் தான் அவன் போன் நம்பரை ‘ஓநாய்’னு பதிவு பண்ணி இருக்கேன். ரொம்ப ஷார்ப்பா இருப்பான். இவனை பார்த்தா பொறாமையா இருக்கு. இவனுக்கு முன்னாடி நான் ஒன்னுமே இல்லை” என்றார்.
தொடர்ந்து பேசிய மிஷ்கின், “காசால குண்டு போடுறாங்க. இவர்களுக்கு ஒரு மதம், அவர்களுக்கு ஒரு மதம். இந்த மதத்திற்குள் குழந்தைகள், பெண்கள் இறக்கிறார்கள். மதம் என்பதும் ஒரு கட்சிதான். புதிய புதிய டெக்னாலஜிக்கள் மூலம் போர் நடக்கிறது. எந்த ஒரு டெக்னாலஜியும் இல்லாமல் இந்த உலகை பத்திரமாக பார்த்து கொண்டிருப்பவர்கள் கவிஞர்கள்” என்று பேசினார்.
விழாவின் இறுதியில் பேரறிவாளன் மற்றும் வீரப்பனோடு பயணித்து சிறையில் இருந்த அன்புராஜ் ஆகியோரை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார் மிஷ்கின்.
இதையும் படிங்க: யூடியூப்பில் அதிக நெகட்டிவிட்டி பரப்பப்படுகிறது - நடிகர் விக்ரம் பிரபு கருத்து