சென்னை: தமிழ்த் திரையுலகின் நட்சத்திர இயக்குநராக வலம் வருபவர், இயக்குநர் அட்லி. அடுத்தடுத்து தொடர் பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்றவர். ராஜா ராணி திரைப்படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அட்லி, ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் எனத் தொடர்ந்து நான்கு பிளாக் பஸ்டர்களை கொடுத்து சினிமா ரசிகர்களுக்கு பிடித்தமான இயக்குநர் வரிசையில் இணைந்தார்.
இப்பொழுது இந்தியாவே எதிர்பார்த்துக் கொண்டு இருக்கும் "ஜவான்" படத்தை இயக்கி வருகிறார். இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரமான ஷாருக்கானை வைத்து இயக்குவது அனைவருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
இயக்கம் மட்டுமல்லாமல் தனது மனைவி பிரியா அட்லியுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்தின்கீழ் வெளியான சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி ரசிகர்களை ஈர்த்தன. அடுத்தடுத்து படங்களைத் தயாரிக்கும் முனைப்பிலும் ஒரு தயாரிப்பாளராக அவர் செயல்பட்டு வருகிறார்.
இயக்குநர் அட்லி, தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. திருமணத்திற்கு பிறகு இந்த தம்பதிகளின் காதல் வாழ்க்கை, இவர்களைத் தாண்டி ரசிகர்களிடமும் வியக்கும் வண்ணம் இருக்கிறது.
இவர்களது காதல் வாழ்கையின் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகும்போது ரசிகர்கள் அவர்களது காதலை கண்டு சந்தோசத்தில் பூரிக்கும் நிகழ்வுகளும் நடந்து இருக்கின்றன. இப்படி காதலில் திளைத்த இந்த தம்பதி தங்களது வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கு செல்லவிருக்கின்றனர். தங்களது குடும்பத்திற்கு புதிதாக ஒரு உறுப்பினரை சேர்க்கப் போகும் மகிழ்ச்சியில் இருவரும் திளைத்திருக்கின்றனர்.
பலவித உணர்வுகள் மேலோங்கி இருக்கும் இந்த தருணத்தில், இயக்குநர் அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை ரசிர்கர்களுடன் பகிர்ந்துள்ளனர். அதில் ’எங்களுக்கு கொடுத்த இந்த அன்பையும் ஆதரவையும், ஆசீர்வாதத்தையும் எங்கள் குழந்தைக்கும் நீங்கள் கொடுக்க வேண்டும்’ என்று அவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
இதையும் படிங்க: அஜித்தை விட விஜய் பெரிய ஸ்டார்.. ரசிகர்களை சீண்டிய ’வாரிசு’ தயாரிப்பாளர்..