சென்னை: தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வரும் பா.ரஞ்சித், தற்போது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் ‘தங்கலான்’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் முதன்முறையாக பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணி அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த திரைப்படத்தில் விக்ரம் உடன் மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். மேலும் தங்கலான் திரைப்படம், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பது போன்ற கதை என்றும், கோலார் தங்கச் சுரங்கத்தில் பணியாற்றிய தமிழ் மக்களின் கதை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
இதன் படப்பிடிப்பு தற்போது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்டப் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தங்கலான் படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோன் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகரான இவர், 'தி பீச்' மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற 'தி பியோனிஸ்ட்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
எனவே, தங்கலான் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில்தான் டேனியல் கால்டஜிரோன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவரை தமிழ் சினிமாவுக்கு வரவேற்று விக்ரம் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியைப் பதிவிட்டனர். அதற்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதில் அளித்துள்ள டேனியல், படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சமீப காலங்களில் விக்ரம் நடிப்பில் வெளியான மகான் மற்றும் கோப்ரா ஆகிய திரைப்படங்கள் சரிவை சந்தித்ததும், பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரங்கள் நகர்கிறது’ என்ற திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ”எனக்கு ராஜாவா நான் வாழுறேன்” - ரூ.150 கோடி மதிப்பில் தனுஷ் கட்டிய பிரம்மாண்ட வீடு