தென் மேற்கு பருவக் காற்று, தர்மதுரை உள்ளிட்ட படங்களை இயக்கிய சீனு ராமசாமி அவரது பிறந்த நாளை நேற்று முன் தினம் (அக்-13) கொண்டாடினார். அவரது பிறந்தநாளிற்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதற்கு அவரும் நன்றி தெரிவித்திருந்தார். அந்த வகையில் அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘அனைவருக்கும் அன்பான வணக்கம். எழுதுவது சீனு ராமசாமி, எனக்கு ஆச்சர்ய பரிசு தர இது நாள்வரை நான் எழுதிய கவிதைகள் அத்தனையும் சேகரித்து எனக்குத் தெரியாமல் நூலாக்கி 'சொல்வதற்கு சொற்கள் தேவையில்லை' என்று அந்நூலுக்கு என் கவிதையையே தலைப்பிட்டு பிறந்தநாள் பரிசாக மனைவி தர்ஷணாவும் மகள்களும் தந்தனர்.
இந்நூலுக்கு வாழ்த்து மடல் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்தை ஒரு கணவனுக்கு ஆச்சர்யமூட்டும் பரிசு தருவதற்காக ஒரு மனைவி தொகுத்த கவிதை தொகுப்பிற்கு ஊக்கமளிப்பதாக நினைப்பதா? அல்லது என் போன்ற கலைஞர்களுக்கு நீங்கள் தரும் இதயப்பூர்வமான அன்பை எண்ணி நெகிழ்வதா எனத் தெரியவில்லை அய்யா? என்னால் இதை முதலில் நம்ப முடியவில்லை. முதலமைச்சரின் கனிந்த இதயத்திற்கு முன் வணங்கி நிற்கிறேன். மேலும் அணிந்துரை தந்த வைரமுத்து கவிஞரும் தன் பங்களிப்பாக ஆயிரம் மலர்களை சொற்களாக்கி சூடிவிட்டார்.
![நடிகர் மோகனுடன் சீனு ராமசாமி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-seenu-ramasamy-script-7205221_14102022195455_1410f_1665757495_401.jpg)
கவிஞர் வைரமுத்துவிற்கு, ‘உங்கள் கருத்த கைகளை முத்தமிடுகிறேன் கவிஞரே. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அம்மா எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய சீனாஜான்சன் என் வாழ்நாளில் சிறப்பான நினைவு பரிசினை தந்த உங்களுக்கு இதய நன்றிகள். நூலினை வீட்டிற்கே வந்து வெளியிட்டவர் நடிகர் மோகன் அவர்கள் அதுவும் திடீரென்று. என் காதலுக்குரியவர் அவர். மோகன் சாருக்கு இதய நன்றிகள். ஆச்சர்யம் அதிர்ச்சியாயிற்று. திக்குமுக்காடிப்போனேன். வாழ்த்திய அனைவருக்கும் அன்பு நன்றி வணக்கம். அன்புடன் சீனு ராமசாமி’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க:ஜேம்ஸ் பாண்ட் போன்று இந்தியன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார் - நடிகர் கார்த்தி