ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் இணையத் தொடர் அயலி. முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த தொடர் பெண் கல்வி, மூடநம்பிக்கை, பெண் விடுதலை உள்ளிட்டவற்றைப் பேசுகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் இயக்குநர் முத்துக்குமார் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், “கரோனாவிற்கு பிறகு நிறைய ஓடிடி தளங்கள் வந்துவிட்டன. இப்படத்தை ஓடிடியில் எடுப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. படமாக எடுத்தால் நேரக் கட்டுப்பாடுகள் இருக்கும். நான் சொல்ல வேண்டியது அதிகம் இருந்ததால் ஓடிடி அதற்கு வாய்ப்பாக இருக்கும். இதனை படமாக எடுத்து இருந்தால் விருதுகள் குவித்து இருக்கும் என்று சொன்னார்கள்.
நிறையப் பேர் இப்படத்தில் வரும் மைய கதாபாத்திரத்தின் புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியில் வைத்துள்ளனர். ஒரு வெப் சீரிஸ் இந்தளவுக்கு மக்களைச் சென்றடைந்து உள்ளது மனதுக்கு நிறைவாக உள்ளது. படமே அடிப்படையில் குழந்தை திருமணம் அதில் உள்ள பிரச்சினைகளைப் பேசுகிறது. கரோனா காலகட்டத்தில் குழந்தை திருமணம் உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது நிறைய மாறியிருந்தாலும் இன்னமும் குழந்தை திருமணம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படத்தில் நான் சொல்ல நினைத்தது ஒரு பெண்ணை சுதந்திரமாக இருக்க விட வேண்டும், சுயமாக சிந்திக்க விட வேண்டும் என்பது தான். யாரும் பெண் குழந்தைகளைக் கொடுமைப் படுத்த வேண்டும் என்று நினைப்பதில்லை. இந்த சமூதாயத்திற்கு இது தான் சரி என நம்ப வைக்கப்பட்டுள்ளது, அப்படி தான் வளர்க்கப்படுகின்றனர்.
ஆனால் அதில் ஆண்களை விடப் பெண்கள் தான் அதிக சிரமப்படுகிறார்கள். ஆணும் சரி, பெண்ணும் சரி என இருவருமே அப்படி தான் வளர்க்கப்படுகிறார்கள். பின் அவர்கள் பெற்றோர்கள் ஆனதும் அதையே மீண்டும் தங்கள் குழந்தைக்கும் செய்கின்றனர். அதனைப் பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டும் என தான் இப்படி எடுத்துள்ளோம். இந்த தொடரில் எனக்கு கிடைத்த நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதனால் தான் இந்த தொடர் இவ்வளவு அழகாக வந்துள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: தளபதி 67: அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!