ஹைதராபாத்: உலகம் முழுவதும் இன்று (பிப்.14) காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் ஜோடிகள் பரிசுகளை பரிமாறி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரசிகர்கள் டிவிட்டரில் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு ஷாருக்கான் பதில் அளித்துள்ளார். "உங்கள் காதல் மனைவி கவுரிக்கு, நீங்கள் வாங்கிக் கொடுத்த முதலாவது காதலர் தின பரிசு என்ன?" என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்துள்ள ஷாருக்கான், "34 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் முதலாவது காதலர் தினத்தை கொண்டாடினோம். பிங்க் நிறத்திலான இரண்டு பிளாஸ்டிக் கம்மலை, அவளுக்குப் பரிசாக அளித்தது நினைவிருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
காதலர் தினத்தையொட்டி ரசிகர்களிடம் இருந்து நீங்கள் எந்த மாதிரியான பரிசை எதிர்பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, "பதான் படத்தின் மீதான ரசிகர்களின் அன்பு தான், இந்தாண்டு எனக்கு கிடைத்த காதலர் தினப் பரிசு" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பல்வேறு கேள்விகளுக்கு அவர் சுவாரஸ்யமான பதில்களை அளித்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான பதான் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் அட்லீ இயக்கத்தில் அவர் நடிக்கும் ஜவான், ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் துங்கி ஆகிய படங்கள் இந்தாண்டு வெளியாகின்றன. இந்த இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
57 வயதாகும் ஷாருக்கான், 1991-ம் ஆண்டு கவுரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஆர்யன், சுஹானா, ஆப்ராம் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இதையும் படிங்க: பழனி முருகன் கோயிலில் சமந்தா - உடல் நலம் குணமடைய வேண்டுதல்!