சென்னை: நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த படம் துணிவு. இப்படத்தையும் போனி கபூர் தயாரித்திருந்தார். இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. வங்கிகள் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள்? என்பது குறித்து இப்படம் பேசியது.
இன்று வரை திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், கடந்த 8ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் வெளியானது முதல் இப்படம் ட்ரெண்டிங்கிலும், டாப் 10 பட்டியலிலும் இடம்பிடித்து வந்தது.
நெட்ஃபிளிக்ஸ் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 10ல் இடம்பெறும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, நெட்ஃபிளிக்ஸ் டாப் 10ல் முதல் மூன்று இடங்களில் துணிவு தமிழ்ப் பதிப்பும், நான்காவது இடத்தில் துணிவு இந்தி பதிப்பும் இடம்பெற்றுள்ளது.
ஆங்கிலம் இல்லாமல், ஒரு இந்திய திரைப்படம் டாப் 5-ல் இடம் பிடித்திருப்பது இதுவே முதல் முறை. அதுவும் ஒரே திரைப்படம் இரண்டு மொழிகளில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. துணிவு திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் டாப் 5-க்குள் இடம் பெற்றிருப்பது அஜித் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அவர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். அதேபோல் குறிப்பிட்ட வாரத்தில் மலேசியாவிலும் துணிவு திரைப்படம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதனை நெட்ஃபிளிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
துணிவு படத்தின் வசூல் நிலவரம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அமைதி காத்து வரும் நிலையில், இதனுடன் பொங்கலுக்கு வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: அஜித் நடித்து கைவிடப்பட்ட திரைப்படங்கள் ஒரு பார்வை!