சென்னை: சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் அறிமுக இயக்குநர் மாலதி நாராயன் இயக்கத்தில், நடிகை ரேகா நடிப்பில் உருவாகி உள்ள "மிரியம்மா" படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய ரேகா, ‘இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
நான் நடித்ததில் யாருமே மறக்க முடியாத கதாபாத்திரம்தான் ஜெனிபர் டீச்சர். இந்த நேரத்தில், அந்த படத்தின் இயக்குநர் பாரதிராஜாவிற்கு நன்றி சொல்கிறேன். கடலோர கவிதைகள் போல பல படங்களில் நடித்துள்ளேன். அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அதிகம் பேசப்பட்டது. அந்த கதாபாத்திரத்தின் பெயர் சொல்லி பேசும்பொழுது அதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்த படத்தில் நான் ஏற்று நடித்துள்ள மிரியம்மா கதாபாத்திரம், எனக்கு மிகவும் பிடித்திருந்தது. காரணம் கதை சொல்லும் பொழுதே, அதில் ஏதோ ஒரு தாக்கம் இருந்ததை உணர்ந்தேன். என்னைப் பொறுத்தவரை மாமா, மச்சான் என சினிமாவில் சொன்னால் நம்ப மாட்டேன்.
சினிமாவில் நடிக்க எனக்கு பணம் முக்கியம் இல்லை. நல்ல கதாபாத்திரம் இருந்தால் பெரிய பட்ஜெட் படங்கள், சின்ன பட்ஜெட் படங்கள் என்று பார்க்க மாட்டேன். முன்பு எல்லாம் கதாநாயகனுக்கு சரிசமமான கதாபாத்திரம் கதாநாயகிக்கு இருந்தது. ஆனால், தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் குறைந்து விட்டது.
விக்ரம், ஜெயிலர், லியோ போன்ற பெரிய படங்கள் வெற்றி பெறுவதைப் போல, சின்ன சின்ன படங்களும் வெற்றி பெறட்டும். காரணம், சின்ன சின்ன தொழில்நுட்பக் கலைஞர்கள் வெளியில் தெரிய வேண்டும். உயிர் இருக்கும் வரை நான் நல்ல படங்களில் நடித்துக் கொண்டே இருப்பேன். நான் கேரளாவைச் சேர்ந்தவள். ஆனால் சொந்த ஊருக்கோ, வெளிநாட்டுக்கோ செல்ல மாட்டேன். சென்னையில் மட்டுமே வசிப்பேன் என்று கூறினார்.
இதையும் படிங்க:ஹாரிஸ் ஜெயராஜ் இசை நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி.. கடும் நிபந்தனைகள் என்ன?