சென்னை: நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘அன்னபூரணி’. சமையல் கலையை மையமாக கொண்டு இயக்கப்பட்ட இந்த படத்தை ஜி ஸ்டுடியோஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. ராஜா ராணி படத்திற்கு பிறகு இந்த படத்திற்கு பிறகு இந்த படத்தில் ஜெய், நயன்தாரா ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
அன்னபூரணி படத்தின் சிறப்பு நேர்காணலில் நடிகர்கள் ஜெய், நயன்தாரா, இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நேர்காணலில் ஜெய், நயன்தாரா ஆகியோரது கெமிஸ்ட்ரி குறித்து கேட்டதற்கு நயன்தாரா, “நாங்கள் ராஜா ராணியில் 20 நிமிடங்கள் தான் நடித்தோம்.
ராஜா ராணி பட ஷூட்டிங்கிற்கு பிறகு ஜெய்யை தற்போது தான் நேரில் சந்திக்கிறேன். ராஜா ராணி கதாபாத்திரத்தில் விட்ட அதே உணர்வோடு தான் இந்த படத்தில் நடித்தோம். மேலும் நாங்கள் நடிக்கும் காட்சிகள் இயல்பாக இருக்கும். நான் எவ்வாறு நடிப்பேன் என அவருக்கு தெரியும், அவர் கேமரா முன் எப்படி நடிப்பார் என எனக்கு தெரியும். அதற்கு அதிகம் பேசிக் கொள்ள வேண்டும் என்ற தேவையில்லை” என்றார்.
நடிகர் ஜெய், “பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படத்தில் நயன்தாராவோடு நடிப்பது சந்தோஷமாக உள்ளது. நாங்கள் சாதாரணமாக பேசினாலே ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. எங்களுக்கு நடிக்கும் போது நல்ல புரிதல் உள்ளது. நாங்கள் ஒன்றாக நடிக்கும் போது மானிட்டர் கூட பார்க்கமாட்டோம்” என கூறினார்.
லேடி சூப்பர்ஸ்டாருக்கு நடிக்கும் போது பதற்றம் வருமா என நெறியாளர் கேட்ட போது நயன்தாரா, “அப்படி சொல்லாதீங்க, அப்படி சொன்னாலே திட்றாங்க. நான் இன்னும் அந்த இடத்திற்கு வரவில்லை என சில பேர் நினைக்கின்றனர் அல்லது நான் ஒரு பெண் என்பதால் என்னை வசைபாடுகின்றனர்.
நான் இயக்குநரிடம் திரையில் வெறும் நயன்தாரா என போடுங்கள் என்றேன். ஆனால் இயக்குநர் நன் சொன்னதை கேட்காமல் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயரை இணைத்தார். என்னை 10 பேர் பாராட்டினால் 50 பேர் திட்டுகிறார்கள்”. என்றார்.
அன்னபூரணி படத்தில் தமன் இசை குறித்து இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, “நாங்கள் அக்டோபர் 21ஆம் தேதி தான் ஷூட்டிங்கை முடித்தோம். நவம்பர் 8 முதல் 20ஆம் தேதிக்குள் படத்தின் முழு பின்னணி இசையை முடித்தார். குறிப்பிட்ட தேதியில் படத்தை ரிலீஸ் செய்ய இசையமைப்பாளர் தமன் முக்கிய காரணம்” என கூறினார்.
இதையும் படிங்க: பருத்திவீரன் பட விவகாரம்; தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு இயக்குநர் அமீர் சரமாரி கேள்வி!