சிவாஜியை பற்றி எழுத என் பேனாவுக்கு அனுபவம் பத்தாது. தனது நடிப்பு ஆற்றலால் தமிழ்நாடு மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்ற நடிப்பு சகாப்தம் சிவாஜிகணேசன் 21.7.2001 அன்று, தனது 74வது வயதில் மரணம் அடைந்தார். எத்தனை படங்கள், பல்வேறு வேடங்கள் என சினிமா ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்ட மகா கலைஞன். எந்த கதாபாத்திரம் ஏற்றாலும் அதில் சிவாஜியை ஒருபோதும் பார்க்க முடியாது. அந்த கதாபாத்திரமாக நம் கண்முன் தோன்றி நடித்துக்கொண்டிருப்பார்.
அவ்வளவு ஏன் நம் நாட்டின் வரலாறு நாயகர்களை சிவாஜி வழியாகத்தான் நமது தலைமுறைகளுக்கு தெரியும். கட்டபொம்மன், ராஜராஜ சோழன், வ.உ.சி, கர்ணன் இவர்களை எல்லாம் நாம் நேரில் பார்த்தது இல்லை. ஆனால் இவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள், வாழ்ந்திருப்பார்கள் என்பதை திரையில் நமக்கு காட்டிய மாமேதை இந்த சிவாஜி கணேசன்.
1952ஆம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை, வசனத்தில் வெளியான பராசக்தி மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தது சிவாஜி என்னும் புயல். முதல் படத்திலேயே சுழன்றடித்தார். கருணாநிதியின் வசனத்தில் சிவாஜி பேசிய ஒவ்வொரு வசனங்களும் தீப்பொறியாக இருந்தன. அதுவும் அந்த நீதிமன்ற காட்சி இப்போது பார்த்தாலும் பார்ப்போர் மனம் சற்று ஆவேசமடையும். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 280க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதுவும் தமிழில் 250 படங்களில் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி. கம்பீர குரல், உணர்ச்சிகரமான நடிப்பு என நடிப்பிற்கான இலக்கணமாக திகழ்ந்தவர். 1960ல் கெய்ரோவில் நடைபெற்ற ஆப்ரிக்க-ஆசிய விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார். இதன் மூலம் சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருது பெற்ற முதல் நடிகர் சிவாஜி தான். மேலும் இந்திய அரசாங்கத்தின் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே போன்ற விருதுகளை வென்றுள்ளார். மேலும் இவர் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகர் ஆவார்.
காமெடி, காதல், குடும்ப படங்கள் என கணக்கிலடங்காத படங்களில் நடித்து நம் மனங்களில் நீங்கா இடம் பிடித்தார். தனது முதுமை காலத்தில் இப்போது உள்ள நடிகர்களுடன் நடித்து அதிலும் தனது தனித் தன்மையை நிரூபித்தார்.
ஒன்ஸ்மோர் படத்தில் விஜய்யுடன், ரஜினியுடன் நான் வாழ வைப்பேன், விடுதலை, படிக்காதவன், படையப்பா, கமலுடன் நாம் பிறந்த மண், தேவர் மகன் ஆகிய படங்களில் நடித்தார். எம்ஜிஆர் உடன் கூண்டுக்கிளி என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்தார். இவர் பெற்ற விருதுகளையும் சிறப்புகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்.
நடிகர் சிவாஜி தனது கடைசி காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இதய துடிப்பை சீர்படுத்த, நெஞ்சில் "பேஸ் மேக்கர்" என்ற கருவி பொருத்தப்பட்டது. பிறகு 5 ஆண்டுகள் அவர் வழக்கமான அலுவல்கள் மேற்கொண்டு வந்தார். ஆனால் 2001 ஜூலை 12ஆம் தேதி சிவாஜி கணேசனுக்கு மீண்டும் உடல் நலக் குறைவு ஏற்பட்டு சென்னை "அப்பல்லோ" மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் முயன்றும் 21ஆம் தேதி அந்த மகா நடிகனின் உயிர் இவ்வுலகை விட்டு பிரிந்தது.
சிவாஜியின் மரணச் செய்தி தமிழ்நாடு முழுவதும் பரவி ஏராளமான பொதுமக்கள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர்.
சிவாஜிகணேசனின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்று லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். புதுச்சேரி முதலமைச்சர் சண்முகம், மூப்பனார், வைகோ, ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசர் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சிவாஜியின் உடலை பார்த்ததும் அவர் கதறி அழுதார். கன்னட நடிகர் ராஜ்குமார் தனது மனைவியுடன் வந்திருந்து அஞ்சலி செலுத்தினார். ஜெமினி கணேசன், கே.பாலசந்தர், பட அதிபர் ஏவி.எம்.சரவணன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அதன் பின் சிவாஜி கணேசன் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலம் சென்ற சாலைகளின் இரு பக்கங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நின்றனர். மாடி வீடுகளிலும், கட்டிடங்களிலும், மரங்களிலும் மக்கள் ஏறி நின்று சிவாஜி உடலை பார்த்து சோகத்துடன் நின்றனர்.
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிவாஜி என்னும் பிறவிக் கலைஞன் நடிப்பு ஆசையுடன் சென்னையில் சுற்றிக்கொண்டு இருக்கும் ஒவ்வொருவரிடமும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.
இதையும் படிங்க: படப்பிடிப்பு தளத்தில் காமெடி செய்து மகிழ்வித்த வடிவேலு