சென்னை: விக்னேஷ் ஷா இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ’சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இவ்விழாவில் அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா, பாடகர் மனோ, தயாரிப்பாளர் பிரபு திலக், இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் பேசுகையில், ”மிர்ச்சி சிவா இந்த படத்தில் பாடவில்லை ஒருவேளை ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாட வாய்ப்புள்ளது என்று கலாய்த்தார். முதல் படத்திலேயே நிறைய நடிகர்களை வைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் ஷா இயக்கியுள்ளார்” என்றார்.
பாடகர் மனோ பேசுகையில், ”சிங்காரவேலன் படத்திற்குப் பிறகு இளையராஜா என்னை அழைத்து நடிக்கப் போனால் உனக்காகப் பாடல் காத்திருக்காது என கூறினார். அதனால் அதற்குப் பிறகு நான் நடிக்கச் செல்லவில்லை. தற்போது மீண்டும் இந்த படத்தில் நடித்துள்ளேன் அனைவருக்கும் நன்றி. மிர்ச்சி சிவாவின் ரசிகன் நான். எனது பாடல்களுக்கு மிர்ச்சி சிவா ரசிகர். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சிவாவுக்கு நன்றி” என்று கூறினார்.
பின்னர் பேசிய மிர்ச்சி சிவா, "கரோனா ஊரடங்கு முடிந்த பிறகு முதலில் தொடங்கிய படம் இது. இக்கதையை இயக்குனர் போனில் என்னிடம் சொன்னார். கதை மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடிப்பதாக சொன்னார்கள். ஆனால் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு செல்போனை கையில் கொடுத்து இதுதான் மேகா ஆகாஷ் என்றனர். கடைசி வரை மேகா ஆகாஷை கண்ணில் காட்டவில்லை. இசை வெளியீட்டுக்கு வருவார் என்று பார்த்தால் இங்கேயும் இல்லை.
இப்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறேன். அது ஃபீல் குட் படமாக இருக்கும். அவருடைய கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்பதால் தான் ராம் என்னை நடிக்க அழைத்தார். ராம் இயக்கத்தில் படம் வெளிவரும் போது நானே அகில உலக சூப்பர் ஸ்டார் என போட வேண்டாம் என சொல்லி விடுவேன்.
நான் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இல்லை. கிரிக்கெட் மேல் அதிக காதல் உள்ளது. CCL ஆட்டத்தில் அதனால் தான் கலந்து கொண்டேன். இவர் சினிமா கலைஞர், கிரிக்கெட் வீரர் இல்லை என்பது கிரிக்கெட் பந்துக்கு தெரியாது. தமிழ்ப்படம் 3 இயக்க அனைத்து இயக்குனர்களிடம் பேச வேண்டும். அவதார், கேஜிஎப் போன்ற படங்கள் வேறு வந்துள்ளது என கலாய்த்தார். நான் ரோகித் சர்மா போல் இருப்பதாக நிறைய மீம்ஸ் வருவதாக சொல்கின்றனர். ரோகித் சர்மா போல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது அவரால் என்னை போல் நடனம் ஆட முடியாது என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.
சூப்பர் ஸ்டார் பிரச்சனை தமிழ்நாடு, இந்தியா, உலக அளவில் முடிந்து விடும். அகில உலக சூப்பர் ஸ்டார் என்பது Galaxy களை கடந்து Black Hole (பிளாக் ஹோல்) வரை சென்றுவிட்டோம். அகில உலக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து நமக்கு போட்டியே கிடையாது” என கூறினார்.
இதையும் படிங்க: விஷாலின் 'மார்க் ஆண்டனி' படப்பிடிப்பு தளத்தில் விபத்து - வைரலாகும் வீடியோ!