சென்னை: நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமானாலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க மிகவும் போராடி வந்தவர். நாயகனாக வெற்றிப் படங்களில் நடித்தாலும் நிலையான வெற்றி என்பது அவருக்கு எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான 'தடையற தாக்க' திரைப்படம் இவருக்கு கமர்ஷியல் ஹிட்டு படமாக அமைந்தது.
அதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு தான் இவருக்குத் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடம் கிடைத்தது எனலாம். அதனைத் தொடர்ந்து குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், யானை என பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தற்போது பாலா இயக்கத்தில் வணங்கான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் சில படங்கள் இவரது நடிப்பில் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் இன்று (நவ 19) தனது 47வது பிறந்தநாளை அருண் விஜய் கொண்டாடுகிறார். இதனை ஒட்டி ஆதரவற்ற குழந்தைகளுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் தனது ரசிகர்கள் உடன் இணைந்து ரத்த தானம் செய்தார். மேலும் அங்குள்ள பணியாளர்களுடன் அன்பாகப் பேசி வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.
அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, "தொடர்ந்து இதுபோன்ற நல்ல விஷயங்களை செய்து வரும் எனது ரசிகர்களுக்கு நன்றி. இது ஒரு விழிப்புணர்வுக்காக நடத்தி வருகிறார்கள். தொடர்ந்து இதுபோன்ற நல்ல விஷயங்களை செய்ய வேண்டும் என்பதே எனது ஆசை.
அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு. அப்போதுதான் நிறைய பேர் இதுபோன்று ரத்த தானம் செய்ய முன்வருவார்கள் ஒரு விழிப்புணர்வாக அமையும்.
வணங்கான் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. என்னுடைய திரையுலக பயணத்தில் இப்படம் ஒரு மைல் கல்லாக இருக்கும். அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'மிஷன்' மற்றும் அறிவழகன் இயக்கத்தில் 'பார்டர்' ஆகிய இரண்டு படங்கள் வர இருக்கிறது. அடுத்த ஆண்டு நிச்சயம் எனக்கு ஒரு பெரிய வருடமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது." என்றார்
அதனைத் தொடர்ந்து வணங்கான் பட போஸ்டர் சர்ச்சை குறித்த கேள்விக்கு, "அது பாலாவின் கருத்து. நீங்களே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் நாமபேசக் கூடாது படம் வரும்போது தெரியும். இது குறித்து எந்த சர்ச்சைக்கும் நான் செல்லவில்லை படம் வரும் போது தெரியும்" என்று கூறினார்.
மேலும் தமிழகத்தில் போதை பழக்கம் அதிகரிப்பு குறித்த கேள்விக்கு, "அனைவருக்கும் சுயக்கட்டுப்பாடு தேவை. விளையாட்டுக்காக ஆரம்பித்து நாளடைவில் அது நம்மை அழித்துவிடும் விஷயமாக மாறிவிடும். யாராக இருந்தாலும் அவர்களை அதில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: எதற்காக நடிகர் ரஜினியின் பேரனுக்கு அபராதம்! முழுத் தகவல்!