சென்னை: நடிகர் அருண் விஜய் தமிழ் சினிமாவில் போராடி, தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் வெற்றி அடைந்தாலும், பெரிய அளவில் தமிழ் சினிமாவில் ஜொலிக்க முடியவில்லை. இதன் பின்னர் 'தடையற தாக்க' படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக வெற்றி பெற்றார்.
அதனை அடுத்து, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் விக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், தனது திரை வாழ்வில் அடுத்த கட்ட பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நடிகர் இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில், இயக்குநர் விஜய் இயக்கத்தில், தற்போது அருண் விஜய் நடித்துள்ள 'மிஷன்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி, நாளை (ஜன.12) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது அருண் விஜய்யின் முதல் பண்டிகை கால ரிலீஸ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அருண் விஜய் கூறியபோது, "எனது முந்தைய படங்களில் நான் செய்த ஆக்ஷன்களை விட, இந்தப் படத்தில் ஆக்ஷன் இன்னும் அதிகமாக, சிறப்பாக இருக்கும். 'மிஷன் சாப்டர் 1' படத்தில் பல எமோஷன் காட்சிகள் உள்ளது. பல திருப்பங்களோடு பார்வையாளர்களுக்குப் பிடித்த வகையிலான திரை அனுபவத்தை இந்தப் படம் கொடுத்து உற்சாகப்படுத்தும்.
இந்த படத்தில் பெயருக்காக நாங்கள் எந்த ஆக்ஷனையும் சேர்க்கவில்லை. திரைக்கதைக்குத் தேவைப்பட்டதுதான் எல்லாம். குறிப்பாக, லண்டனில் ஓடும் பேருந்தில், ஒரு ஆக்ஷன் பிளாக் ஷாட் உள்ளது. அதில், எனது தசைநார் கிழிந்தது. நான் நிறைய ஸ்டண்ட்களைச் செய்ய வேண்டியிருந்தது.
படத்தின் சிறப்பு என்னவென்றால், திரைக்கதை முன்னேற முன்னேற, ஆக்ஷன் காட்சிகளும் பெரிதாகவும், அதிரடியாகவும் இருக்கும். ஆக்ஷனில் எனது சிறந்த திறனை வெளிக்கொண்டு வர இந்தப்படம் மூலம் ஒரு தளம் கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
மேலும், இந்த படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்க, சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீது, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மாதவிடாய் பற்றிய விழிப்புணர்வு நாட்டின் ஒவ்வொரு பெண்ணிற்கும் தேவை" - நடிகை நயன்தாரா!