சென்னை: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் எல்லோருமே சாதிப்பதில்லை. என்னதான் திறமை இருந்தாலும் ஏதோ சில காரணங்களால் அவர்களால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போய் விடுகிறது. விஜய், சூர்யா ஆகிய வாரிசு நடிகர்கள் நீண்ட கால போராட்டத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் தங்களுக்கென முத்திரையை பதித்தவர்கள் ஆவர். அப்படி வாரிசு நடிகராக இருந்து தற்போது தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்திருப்பவர் அருண் விஜய்.
நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் பல ஆண்டுகள் காத்திருப்பின் பலனாக தற்போது வெற்றி நடிகராக வலம் வருகிறார். 1995ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கிய 'முறை மாப்பிள்ளை' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவர் நடித்த எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. 'பாண்டவர் பூமி', 'இயற்கை', 'தடையற தாக்க' ஆகிய படங்கள் அருண் விஜய்க்கு ஓரளவுக்கு கைகொடுத்தன. ஆனாலும் அவருக்கான வெற்றி என்பது கைகூடாமல் இருந்தது.
அதன்பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் என்ற நெகடிவ் வேடத்தில் நடித்தார். அப்படத்தில் அருண் விஜய்யின் வில்லத்தனம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இந்த படத்துக்கு பின் அதிரடி ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வர தொடங்கினார். 'குற்றம் 23', 'தடம்', 'யானை' என கமர்ஷியல் குதிரையாக ஓடத் துவங்கினர். தற்போது அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கொஞ்சம் கூட நேரமில்லாமல் பிஸியாக நடித்து வருகிறார். இனி வரும் படங்கள் அனைத்தையும் வெற்றி படமாக கொடுத்தாக வேண்டும் என்ற எண்ணத்தில், ஒவ்வொரு காட்சிக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதாக கூறப்படுகிறது.
அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஸ்டெஃபி படேல் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் பார்டர். டிஐஏ ஏஜென்ட் கதபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. ஏற்கனவே அறிவழகன் - அருண் விஜய் கூட்டணியில் 'குற்றம் 23' திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது.
அடுத்ததாக 'அச்சம் என்பது இல்லையே' என்ற திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.எல் விஜய் இயக்குகிறார். இதனை தொடர்ந்து பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்திலும் அருண் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்து பிறகு அவர் வெளியேறினார்.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ஹரி இயக்கத்தில் 'அருவா' படத்தில் அருண் விஜய் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அருவா படமும் சூர்யா நடிக்க இருந்த படம்தான். மேலும் அறிவழகன் இயக்கத்தில் 'குற்றம் 23 - பகுதி 2' வேலைகளிலும் இறங்கி உள்ளார். இப்படி இந்த ஆண்டு அருண் விஜய் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: 'பொன்னியின் செல்வன் 2' முதல் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு!