சென்னை: அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் அயலான், லால் சலாம், அரண்மனை 4, தங்கலான் ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் குறித்த செய்தி தொகுப்பைக் காணலாம்
அயலான்: இயக்குநர் ரவிக்குமார் இன்று நேற்று நாளை என்ற டைம் டிராவல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அந்த படம் கொடுத்த மிகப் பெரிய வெற்றியால் தனது அடுத்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்தது.
படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச் சென்றது. இறுதியாகப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனப் படத்தின் டீசரை வெளியீட்டு அறிவித்துள்ளனர். படத்தின் டீஸரும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குழந்தைகள் விரும்பும் படமாக அயலான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள காரணத்தால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த திரைப்படமும் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இது இந்தியில் வெளியான ’கை போ சே (kai po che)’ படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து படக்குழு தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டும்.
அரண்மனை 4: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் 3 பாகங்களாக வெளியாகி ஹிட் ஆன திரைப்படம் அரண்மனை. கடைசியாக வெளியான அரண்மனை 3 திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் அதைப்பற்றி எனக்குக் கவலையில்லை என்ற ரீதியில் இயக்குநர் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்து வருகிறார்.
தங்கலான்: இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் தான் ‘தங்கலான்’. இந்தப் படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விக்ரமிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. தங்கலான் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தை அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் டீஸர் வெளியீட்டின் போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவின் அடுத்த படம் தி கேர்ள்ஃபிரண்ட்!