சென்னை: கடந்த 1992 ஆம் ஆண்டு தீபாவளிக்கு சுமார் 8 படங்கள் வெளியானது. ரஜினிகாந்த் நடித்த பாண்டியன், சத்யராஜின் திருமதி பழனிச்சாமி, பாக்யராஜ் நடிப்பில் ராசுக்குட்டி, பிரசாந்த் நடித்த செந்தமிழ்ப்பாட்டு, விஜயகாந்த் நடித்த காவியத் தலைவன் வேறும் இன்னும் சில படங்கள் வெளியாயின. இதனுடன் இன்னொரு மெகாஹிட் படமும் வெளியானது.
அதுதான் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் இணைந்து நடித்த தேவர் மகன். இப்போது வரையிலும் சிறந்த திரைக்கதைக்கான பாடமாக இப்படம் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட தேவர் மகன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 31 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இப்போது பார்த்தாலும் ஆயிரம் விஷயங்கள் அதில் இருக்கும். கமல் ஹாசனின் கதை, திரைக்கதையில் உருவான இப்படத்தை பரதன் இயக்கி இருந்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கான தனி முத்திரையை இப்படத்திலும் பதித்திருந்தார் எனலாம். கமல்ஹாசன், சிவாஜி மட்டுமின்றி கௌதமி, ரேவதி, நாசர், காக்கா ராதாகிருஷ்ணன், வடிவேலு, சங்கிலி முருகன், எஸ்.என்.பார்வதி என்று பல பிரபலங்களுக்கும் பெயர் சொல்லும் படமாக அமைந்தது தேவர் மகன் திரைப்படம்.
இப்படத்திற்கு சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது கிடைத்தது. சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதினை சிவாஜி கணேசனுக்குப் பெற்றுக் கொடுத்தது. சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது ரேவதிக்கும், சிறந்த ஆடியோகிராபிக்கான விருதும், சிறந்த பாடகிக்கான விருது எஸ்.ஜானகிக்கும் இந்த படம் பெற்றுக் கொடுத்தது.
படத்தின் கதை, திரைக்கதையைவிட கமல்ஹாசனின் வசனங்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டன. அவ்வளவு வீரியமான வசனங்கள் இந்தப் படத்தில் இருந்தன. கூடவே இளையராஜாவின் இனிமையான இசையும் சேர்ந்து கொள்ள.. இப்போதும் பார்க்கப் பார்க்க திகட்டாத படமாக அமைந்துள்ளது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் செதுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிகளும் காண்போருக்கு புதிய திரை விருந்தை அளித்து வருகிறது.
தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை அள்ளிய இப்படம், ஆஸ்கர் அரங்கிற்கும் பரிந்துரைக்கப்பட்டது. இவை அனைத்தும் வெளிப்பார்வையாக தெரிந்தாலும், படத்தின் உள்ளாந்த கருத்தியலுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின. மலையாள இயக்குநர் பரதன்தான் இந்த படத்தை இயக்கினார்.
ஒருபுறம் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், மறுபுறம் தேவர் மகன் சாதிய வன்மத்தை ஊட்டுவதாகவும், ‘போற்றிப் பாடடி பொண்ணே’ பாடலின் உருவாக்கம் ஒரு பிரிவு மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது குறித்து மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
சாதி வேண்டாம் என்று சொல்லுகிற சாக்கில் ஒரு சாதியை தூக்கி பிடித்திருக்கிறார் கமல் என்ற சர்ச்சையும் எழுந்தது. ஒரு படம் வெளியாகி 31 ஆண்டுகள் கடந்த பிறகும் அதன் சூடு இன்று வரை தணியாமல் இருப்பதே அப்படத்திற்கான வெற்றி என சிலர் கூறுகின்றனர். அதே சமயம் இந்த படத்தின் கதை என்னுடையது என்று எழுத்தாளர் கலைஞானம் அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகிறார்.
அந்த தேவர் மகன் படத்தின் கதைக்காக கமல்ஹாசன் 25 ஆயிரம் பணம் கொடுத்தார். அத்தனை பெரிய படத்துக்கு இத்தனை சிறிய தொகையா? இது நியாயமா? என்று கலைஞானம் கேட்டுக் கொண்டே இருந்ததை கண்டுக்காமல் மவுனமாகவே இருந்தார் கமல். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டு தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில் வருத்தம் தெரிவித்த நடிகர் கமல், தேவர் மகன் இரண்டாம் பாகம் எடுத்தாலும் அப்படத்துக்கு தேவர் மகன் எனப் பெயர் வைக்க மாட்டேன் என்று சொல்லியிருந்தார்.
தேவர் மகனை போல சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒருசேர அதிகம் சம்பாதித்த இன்னொரு தமிழ்த் திரைப்படம் இருக்குமா! என்று தெரியவில்லை. இப்படத்தின் மீதான கடும் விமர்சனங்களுக்கு காரணம் தென்மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் நிகழ்ந்ததற்கு ‘தேவர் மகன்’ ஒரு முக்கிய காரணியாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
சாதியப் பெருமிதத்தைப் பேசிய படம், தமிழ் சினிமாவில் அரிவாள் கலாசாரத்தைத் துவக்கி வைத்த படம் என்றெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ரேவதி கதாபாத்திரம் முதலில் மீனா நடித்து இரண்டு நாட்கள் படப்பிடிப்பும் முடிந்தது. ஆனால் மீனாவின் தேதிகள் பிறகு ஒத்து வராததால் இந்தப் படத்திற்குள் ரேவதி வந்தார். ‘பஞ்சவர்ணமாக’ ஒரு கிராமத்து அறியாப் பெண்ணின் சித்திரத்தை ரேவதி திறம்படக் கையாண்டார்.
சிவாஜி கணேசனின் நடிப்பைத் திறமையாகப் பயன்படுத்திக் கொண்ட படங்களுள் ஒன்று ‘தேவர் மகன்’. அந்தப் பஞ்சாயத்துக் காட்சி ஒன்று மட்டுமே போதும். சிவாஜியின் உடல்மொழியும் வசனங்களும் அத்தனை இயல்பாக இருக்கும். “இந்த காட்டுமிராண்டிக பயக கூட்டத்துல உங்கொப்பனும் ஒருத்தன்றதை மறந்துடாத..." என்பது தொடங்கி, "செத்துப் போ... யாரு தடுக்க முடியும்... அதுக்கு முன்னாடி ஊருக்கு ஏதாச்சும் நல்லது பண்ணு" என்று பாசமும் ஆவேசமும் கலந்து கமலின் சட்டையைப் பிடிக்கும் காட்சி என வாழ்ந்திருந்தார்.
அதேபோல் இசக்கி என்ற வேடத்தில் வடிவேலு பிச்சு உதறிவிட்டார். நகைச்சுவை வடிவேலுக்குள்ளும் ஒரு உணர்ச்சிகரமான நடிகன் இருக்கிறான் என்பதை வெளிக்கொண்டு வந்த படம் இது. சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படம், இந்த இசக்கி கதாபாத்திரம்தான் மாமன்னன் என்று அவரே சொல்லியிருக்கிறார். தேவர் மகன் திரைப்படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் உட்பட பல அங்கீகாரங்கள் கிடைத்தன.
ஆஸ்கர் விருதிற்காக இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட படமாகவும் தேர்வு பெற்றது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த ஒரு படம் சாதிய ரீதியான படம் என்று ஒரு குறுகிய வட்டத்திற்குள் சிக்கிக்கிடக்கிறது. மீண்டும் இதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர் நோக்கிக் காத்துகிடக்கின்றனர்.
இதையும் படிங்க: CSK அணியுடன் களமிறங்கிய விக்ரம்.. வெளியானது துருவ நட்சத்திரம் மாஸ் ட்ரெய்லர்!