சென்னை: 1992ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் தீபாவளி தினத்தன்று வெளியான ‘தேவர் மகன்’ படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. கமல் ஹாசனின் கதை, திரைக்கதையில் உருவான இப்படத்தை பரதன் இயக்கி இருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, தனக்கான தனி முத்திரையை இப்படத்திலும் பதித்திருந்தார்.
கெளதமி, ரேவதி, நாசர் மற்றும் வடிவேலு ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் அழுத்தமாக நடித்திருந்தனர். இளையராஜாவின் இசையில் வெளியான இப்படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும், இன்றும் பல கிராமங்களிலும் தற்போதைய ரியாலிட்டு ஷோ போட்டியாளர்களிடமும் மவுசு குறையாத ஒன்றாக இருந்து வருகிறது.
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் செதுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சிகளும் காண்போருக்கு புதிய திரை விருந்தை அளித்து வருகிறது. தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளை அள்ளிய இப்படம், ஆஸ்கர் அரங்கிற்கும் பரிந்துரைக்கப்பட்டது. இவை அனைத்தும் வெளிப்பார்வையாக தெரிந்தாலும், படத்தின் உள்ளாந்த கருத்தியலுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பின.
முக்கியமாக, குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்துவதுபோல் இருப்பதாகவும், தேவர் மகன் என்ற படத்தின் பெயரை மாற்ற வேண்டும் எனவும் பல்வேறு பிரச்னைகள் உருவாகின. ஆனாலும், தேவர் மகன் திரைக்கதை இன்றும் ஊடக மற்றும் சினிமாத்துறை கல்லூரிகளில் ஒரு பாடமாக இருந்து வருகிறது.
அதேநேரம் படத்தின் இறுதிக் காட்சியில், “புள்ள குட்டிகள படிக்க வைங்கடா.., உனக்குள்ள முழுச்சிகிட்டிருக்குற அதே மிருகம், எனக்குள்ள துாங்கிக்கிட்டு இருக்கு..’ என்கிற கமல்ஹாசனின் வசனங்கள் சாதி ஒழிப்பிற்கு சாட்சியாக இருந்தன. இருப்பினும், ‘நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூப்புட்டப்போ போனவங்கள முக்கால்வாசி பயலுக நம்ம பயலுகதான்.. எங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் இந்த அரிவாளும் வேல்கம்பும்தான்..’ என்ற வசனங்கள் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்தி பிடிப்பதுபோல் இருப்பதாகவும் கூறினர்.
ஆனால், இவை ஒரு களத்தின் வாழ்வியல் விளக்கம் என அப்போதே தெளிவுபடுத்தப்பட்டது இதற்கு இடைப்பட்ட காலத்தில் எழுத்தாளர் கலைஞானம், தேவர் மகன் கதை தன்னுடையது எனவும், இதற்கான உரிமைத்தொகை குறைந்த அளவே கொடுக்கப்பட்டது எனவும் கூறி வருகிறார்.
இத்தனை இடர்களுக்கு இடையில் இப்படம் இன்றும் ஒவ்வொரு திரைக்கலைஞனுக்கும் ஒரு பாடமாக இருந்து வருகிறது. மேலும் இதன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில்தான், தேவர் மகன் தனது 30ஆவது ஆண்டு நிறைவு தினத்தை கொண்டாடுகிறது.
இதையும் படிங்க: தமிழ் திரைப்படத் தயாரிப்பில் இறங்கும் தோனி என்டர்டெய்ன்மெண்ட்