ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், அம்மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனையும், பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சதன் பிரபாகரனையும் ஆதரித்து தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பரமக்குடியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அந்த பரப்புரையின்போது பேசிய அவர், "வரவிருக்கும் தேர்தல் மக்களுக்கு யார் நன்மை செய்தார்கள் என்பதை வெளிப்படுத்தும் தேர்தலாக இருக்கும். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது அவர்களுடன் திமுக கூட்டணியில் இருந்தது, அச்சமயம் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் 10 பேர் இருந்தனர். இருப்பினும் அவர்கள் தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை. சேது சமுத்திரத் திட்டம் என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி அதற்காக சுமார் 42 கோடிகளை ஒதுக்கி என்ன செய்தார்கள் என்றும் தெரியவில்லை.
அதிமுக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் காணாமல் போய்விடும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் இந்த கழகம், புயல் வந்தாலும் சரி, சுனாமி வந்தாலும் சரி, பூகம்பமே வந்தாலும் ஒருபோதும் அசைக்க முடியாது. ஜல்லிக்கட்டு தமிழகத்தில் மீண்டும் வரக்காரணாக இருந்தது மோடிதான். மதுரையில் 1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க காரணம் பிரதமர் மோடிதான் " என்று கூறினார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நெசவாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.2 கோடி தர பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு ரூ.122 கோடி பயிர் காப்பீட்டு தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள தொகை விரைவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.