2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மிக முக்கியமான ஆட்களான குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் பயணம் செய்வதற்காக 12 அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஏ.டபிள்யூ.101 ஹெலிகாப்டர்களை வாங்கியது.
2013ஆம் ஆண்டு அகஸ்டா வெஸ்ட்லேண்டின் தலைமை அலுவலரான புருனோ ஸ்பாக்னோலினி இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்காக தரகர்களுக்கு பணம் வழங்கியதாக கூறி கைது செய்யப்பட்டார். பிறகு, மத்திய அரசு இந்த ஒப்பந்தத்தை தள்ளிவைத்தது.
2014ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்தது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங், முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனிய காந்தி, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனி ஆகியோர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இதில் தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மிஷெலின் வங்கி கணக்கில் சட்டவிரோதமாக 240 கோடி இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு டிசம்பர் 4ஆம் தேதி 2018ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார்.
மத்திய புலனாய்வு அமைப்பு இவரை, தொடர்ந்து விசாரித்துவந்த நிலையில் ஈஸ்டர் திருநாளை கொண்டாடுவதற்கு பிணையில் விடுவிக்கக் கோரி டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பிணைக்கான மனுவை நிராகரித்தது.
இது குறித்து நீதிபதி அரவிந்த் குமார் கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவரான கிறிஸ்டியன் மிஷெலை பிணையில் விடுவித்தால் வழக்கு சம்பந்தப்பட்ட ஆதாரங்களை அழிக்க வாய்ப்புள்ளது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர் சிறையிலிருந்துபடியே ஈஸ்டர் திருநாளை கொண்டாடலாம் என அறிவித்தது.