திருவண்ணாமலை: திருவண்ணாமலை தொகுதிக்குட்பட்ட கீழ்கச்சிராப்பட்டு கிராமத்தில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் வெங்கட்ராமன் தலைமையில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற கள்ளொட்டு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (33) என்பரை நிறுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அவர் இரண்டு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை உரிய ஆவணம் இன்றி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அலுவலர்கள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிவேலிடம் ஒப்படைத்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் வாக்காளருக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்படுகிறதா, உரிய ஆவணங்கள் இன்றி பணம் அல்லது பொருட்கள் ஏதேனும் எடுத்துச்செல்லப்படுகிறதா என்பன குறித்து பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.