சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2021-2022ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
அப்போது, “இந்த சட்டப்பேரவையில் தொடர்ந்து 11ஆவது முறையாக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்கின்ற பெரும் பாக்கியம் கிடைத்த மகிழ்ச்சி ஒரு புறம், இந்த நிதிநிலை அறிக்கையால் தமிழ்நாடு மக்கள் அடைந்திருக்கிற மகிழ்ச்சி இன்னொரு புறம், மீண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அரசே அமையும் என்று மக்கள் உறுதி கொடுத்திருக்கிற மகிழ்ச்சி மற்றொரு புறம், இப்படி அடுக்கடுக்காக மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
அரசு உள்ளார்ந்த முனைப்புடன் செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களாலும், அறிவித்துள்ள சமூக மேம்பாட்டுத் திட்டங்களாலும், தமிழ்நாட்டு மக்கள் பெருவாரியாகப் பயன்பெற்று அரசுக்கும், அதிமுகவிற்கும் மாபெரும் மக்கள் செல்வாக்கு பெருகுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதனைத் திசை திருப்பும் வகையில், மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மொத்த நிலுவைக் கடன் 4.79 லட்சம் கோடி ரூபாய் எனவும், பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62,000 ரூபாய் கடன் சுமத்தப்படுகிறது எனவும் முற்றிலும் தவறான வாதங்களை பொது வெளியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் தனது வாதத்தை இப்பேரவைக்கு வந்து நேருக்கு நேராக என் முன் வைத்து, நான் தருகின்ற பதிலை அவர் கேட்க முடியும். ஆனால், திமுக.-வின் வழக்கப்படி, அவர் வெளிநடப்பு, அவை புறக்கணிப்பு செய்துவிட்டார்.
இந்த ஜனநாயகக் கடமையை திமுக-வினர் என்றுமே மதிப்பதில்லை. ஏதோ சுற்றுலாவிற்கு வருவது போல இந்த மாமன்றத்திற்கு வருகிறார்கள். இங்கே உட்கார்ந்து பலவாறு சிரிக்கிறார்கள், பேசுகிறார்கள். வந்ததும் வெளிநடப்பு என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறார்கள். ஸ்டாலின் முதலமைச்சர் ஆன பிறகு தான் பேரவைக்கு வருவோம் என்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் சொல்லியிருக்கிறார்.
அத்தைக்கு மீசை முளைக்கப் போவதும் இல்லை, அந்த அத்தை உருமாறி சித்தப்பா ஆகப்போவதும் இல்லை. ஸ்டாலின் முதல்வராகப் போவதுமில்லை. திமுக.வினர் என்றைக்குமே சட்டப்பேரவைக்கு வரவே போவதில்லை. தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்திக்கப் போகிறது என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறேன்” எனப் பேசினார்.