கோயம்புத்தூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். தொடர்ந்து ஐந்து நாள்களாகவே தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும், அவரை ஆதரித்து நடன ஆசிரியர் கலா மாஸ்டர் பரப்புரை மேற்கொண்டார். இச்சூழலில் இன்று நடிகர் ராதாரவி வானதி சீனிவாசனை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.
கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், “நான் இங்க நடிகனாகத்தான் வந்துள்ளேன். இங்கு போட்டியிடும் கமல்ஹாசன் நேர்மை அற்றவர். தனது தனிப்பட்ட வாழ்வையே நினைத்துக் கொண்டிருப்பவர். தன்னை நம்பிவந்த பெண்களைக் காப்பாற்றாமல் கைவிட்டவர்.
இவர் எப்படி மக்களைக் காப்பாற்றுவார்? கமலின் வாழ்க்கை முறை வீட்டைச் சீரழிக்கும் வகையில் இருக்கிறது. வானதி சீனிவாசன் ஓட்டு வங்கியைப் பிரிப்பதற்காக திமுகவின் பி - டீம் ஆக கமல் செயல்பட்டுவருகிறார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவுடன் 27 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு கூட்டணியில் இருந்துவருகிறது. காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சுயமாகச் சிந்திக்காமல் தாளில் எழுதிவைத்து அதைப் பார்த்துப் படித்துக் கொண்டிருப்பவர்தான் திமுக தலைவர் ஸ்டாலின்.
ரூ.350 கோடி ரூபாய்க்கும் மேல் பிரசாந்த் கிஷோருக்கு கொடுத்து தலைக்கு விக் வைத்துள்ளார். அவரின் முதலமைச்சர் கனவு, கனவாகத்தான் இருக்கும்” என்று பேசினார்.
தொடர்ந்து, அனைவரும் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் என்று பேசிக்கொண்டிருக்க வேட்பாளர் பெயரை மறந்த ராதாரவி, உடனடியாகச் சுதாரித்துக்கொண்டு அருகில் இருந்தவரிடம் கேட்டு வானதி சீனிவாசனுக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களின் பாதம் தொட்டு வணங்கிக் கேட்டுக்கொள்வதாக வேண்டினார்.