கன்னியாகுமரி: தங்கத்தாலியைப் பறிக்க வந்தவர், எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்ட பெண்ணை கொலை செய்த சம்பவம் மேக்காமண்டபம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மேக்காமண்டபம் அருகே பூந்தோப்பு புன்னத்துவிளை பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். கேரளாவில் கட்டட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மேரிஜெயா(45). இவர் மூளகுமூடு பகுதியிலுள்ள நியாய விலை கடைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது பூந்தோப்பு நல்லபிள்ளைகுளம் பகுதியில் வைத்து, முளகுமூடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் மெர்லின்ராஜா, மேரிஜெயாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்கத் தாலியைப் பறிக்க முயன்றுள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத மேரி கூச்சலிட்டார். மேரிஜெயாவின் சத்தத்தைக் கேட்ட அப்பகுதியினர் திரண்டு வருவதைக் கண்ட மெர்லின்ராஜாவும், அவரது கூட்டாளியும் சேர்ந்து மேரிஜெயாவை குளத்தில் தள்ளிவிட்டுள்ளனர். இதில் மேரிஜெயா குளத்தில் தத்தளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
நிலப் பிரச்னையில் தொடங்கிய பகை: மைசூருவில் அரங்கேறிய இரட்டைக் கொலை
பின்னர் அங்கிருந்து தப்பியோடிய இருவரில், மெர்லின் மட்டும் பொதுமக்கள் கையில் சிக்கினார். அவருக்குச் சரியான பாடம் கற்பிக்க, பொதுமக்கள் கூடி அவரை அடித்துத் துவைத்துள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மெர்லினை மீட்டு, அவரைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
குளத்தில் பிணமாகக் கிடந்த மேரிஜெயாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். வழக்குப்பதிவு செய்து திருவட்டார் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், நகைப் பறிப்பில் ஈடுபட்ட மெர்லின்ராஜ் ராணுவத்தில் பணியாற்றி ஒழுங்கு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டவர் என்றும், இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் அடிதடி, கட்ட பஞ்சாயத்து, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
இவருக்குத் தக்க தண்டனை வழங்கி, மேலும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் எனக் காவல் துறையினரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.