ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த பெரும்புலிபாக்கத்தை சேர்ந்த இளைஞர் ராஜ்குமார். இவர் தனது ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட தனது பல்சர் பைக்கை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு சென்றுள்ளார். பைக்கில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருப்பது தெரியாமல் பழைய பாளையத்தை சேர்ந்த சகோதரர்களான ராஜேஷ், அஜித் மற்றும் சரவணன் ஆகிய மூவரும் சேர்ந்து அதனை திருடிச்சென்றுள்ளனர்.
பைக் திருடப்பட்டதை அறிந்த ராஜ்குமார், ஜிபிஎஸ் சிக்னல் உதவியோடு பைக் செல்லும் பாதையை பார்த்து உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் கிராம மக்களுடன் சேர்ந்து கர்ணாவூர் வேடந்தாங்கல் சாலையில் 50 கி.மீ தூரத்திற்கு துரத்தி சென்று பைக்கை மீட்டு, திருடி சென்ற சகோதரர்கள் உட்பட மூவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து மூவரிடம் அவளூர் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மூன்று பேரும் ஒன்றாக ரயில் நிலையங்களில் பொறி விற்பனை செய்து வந்ததும், மூவரும் சேர்ந்து பல பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக திருடி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த அவளூர் போலீசார் வாலாஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தனியார் மண்டபத்தில் சூதாட்டம்...32 பேர் கைது