மதுரை: மாநகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பச்சிளம் குழந்தையின் தலை ஒன்றை கவ்விக்கொண்டு வந்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது.
தபால் தந்தி நகர் செல்லும் வழியில் உள்ள பீபீ குளம் வருமானவரித் துறை அலுவலகம் எதிரே நாய் ஒன்று பிறந்து சில நாட்களே ஆன குழந்தையின் தலையை கவ்விக்கொண்டு சென்றது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் பெரும் பீதி அடைந்தனர்.
உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் துறைக்கு தொலைபேசி மூலம் தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்குச் சென்ற தல்லாகுளம் காவல் துறையினர் குழந்தையின் தலையை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கழிவு நீர் கால்வாயில் கிடந்த குழந்தையின் தலையை நாய் கவ்வி சென்றுள்ளதை பொதுமக்கள் பார்த்ததாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர். பிறந்த குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் கழிவு நீர் கால்வாயில் வீசி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
குழந்தை இல்லாமல் பல தம்பதியினர் தங்களின் வாழ்க்கையை வேதனையுடன் கடந்து வரும் தருணத்தில், இச்சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.