திருவள்ளூர்: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சோழபுரம் இந்திரா நகர் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் ராஜராஜன். இவரது மகள் லக்ஷனா ஸ்வேதா. இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இதற்கிடையில் சொந்த ஊரிலே மருத்துவம் பயில ஆசைப்பட்டு அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வை எழுதி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று (செப் 8) நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின. அப்பொழுது மாணவி தான் நீட் தேர்வில் தோல்வியடைந்ததை பார்த்து மன வேதனையில் விடியற்காலையிலேயே தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட அவரது தாயார் திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்ததை அறிந்த அடுத்த கணமே மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தாயார் அமுதா, ஆவடி அடுத்த பாண்டேஸ்வரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிறுவன் சுதீஷின் இதயம் உட்பட உடல் உறுப்புகள் தானம் - இறந்தும் வாழப்போகும் சிறுவன் சுதீஷ்