சென்னை: கே.கே.நகர் அழகிரிசாமி சாலையில் பிரபல பத்மா சேஷாத்திரி தனியார் பள்ளி பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு வணிகவியல் பாடம் எடுக்கும் ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் ராஜகோபால். இவர் மாணவிகளிடம் அடிக்கடி இரட்டை அர்த்தத்தில் பேசி வந்ததாகவும், நீண்ட நாள்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
முதல் தகவல்
இதுதொடர்பாக அந்தப் பள்ளியில் படித்து முடித்த மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் பள்ளி நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. ஆசிரியர் ராஜகோபால், பள்ளி மாணவிகளுக்கு வாட்ஸ்-அப் செயலில் அனுப்பிய ஆபாசச் செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்கள் ஆதாரமாக வாட்ஸ்-அப், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற தளங்களில் வைரலாகப் பரவின.
தொடர்ந்து, பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் சமூக வலைதளத்தில் கருத்துக்களைப் பதிவிடத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபலங்களின் குரல்
இதனைத் தொடர்ந்து, பிரபலப் பாடகி சின்மயி, மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதனையடுத்து முதற்கட்டமாக அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர். உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பலதரப்பட்ட தரப்பில் இருந்தும் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தி.நகர் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் ஆகியோர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
டெலிட் செய்த குறுஞ்செய்திகளைத் திருப்பி எடுத்த போலீஸ்
சென்னை நங்கநல்லூரில் உள்ள தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் ஆசிரியர் ராஜகோபாலின் வீட்டிற்கு இரண்டு தனிப்படைக் காவலர்கள் சென்றனர். அங்கு ராஜகோபால், அவரது மனைவி, தாயார் என மூவரையும் அழைத்து விசாரணை நடத்தினர்.
அவரின் வீட்டிலிருந்து ராஜகோபால் பயன்படுத்திய செல்போன், லேப்டாப் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றி ஆய்வு நடத்தினர். அதனை ஆய்வு செய்தபோது வாட்ஸ்-அப் மேசேஜ்களை அவர் டெலிட் செய்து இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. மாணவிகளுக்கு அனுப்பிய மெசேஜ், அந்தரங்கப் புகைப்படங்களை அவர் டெலிட் செய்து விட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சைபர் கிரைம் காவல் துறையின் உதவியோடு டெலிட் செய்த மெசேஜ்களை ரெக்கவர் செய்தனர். அதனை வைத்து ராஜகோபாலனிடம் விசாரணை நடத்தினர்.
சேட்டையை ஒப்புக்கொண்ட ராஜகோபால்
ராஜகோபால் கடந்த 27 ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் பணிபுரிந்து வந்துள்ளார். இதில், கடந்த ஐந்து ஆண்டுகளாக 11ஆம், 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் வகையில் ஆபாச மெசேஜ்களை அவர் அனுப்பி வந்ததாகவும், மாணவிகளிடம் வாட்ஸ்-அப் மூலமாக சேட்டிங் செய்வது, மாணவிகளின் அந்தரங்க புகைப்படத்தை அனுப்பச் சொல்லிக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் ஆசிரியர் ராஜகோபால் வாக்கு மூலம் தெரிவித்ததக காவல் துறையினர் கூறியுள்ளனர்.
பள்ளியில் இதே போன்ற செயலில் ஈடுபட்டு வரும் சிலர் இருப்பதாகவும் ஆசிரியர் ராஜகோபாலன் கூறியுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார். இதேபோல், சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது மற்றொரு மாணவி இன்ஸ்டாகிராமில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
குழந்தைகள்தான் பிரதானம்
இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நல ஆர்வலர் ஆண்ட்ரூ சேசுராஜ் கூறுவதாவது, "பள்ளியில் இதேபோன்று மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு நடந்து வருவதால், இதனைத் தடுக்க அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகள் பாதுகாப்புக் குழு ஒன்றை பள்ளி நிர்வாகம் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்த பின்பும், குறிப்பிட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கத் தவறியதால் பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படக் கூடிய குழந்தைகள், மானத்திற்கு பயந்து புகார் அளிக்க முன்வராமல் இருப்பதாகவும், தைரியமாக முன்வந்து புகார் அளிக்கலாம், அவர்களின் ரகசியம் சட்டத்தின்படி காக்கப்படும், போக்சோ சட்டத்தை பெற்றோர்கள் தெளிவாகப் புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.