சென்னை: மயிலாப்பூர் அப்பு தெருவில் ரியல் எஸ்டேட் அதிபரும், அதிமுக பிரமுகருமான கோபி என்ற உருளை கோபி (38), நான்கு பேர் கொண்ட கும்பலால் நேற்றிரவு (செப். 14) வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட உருளை கோபி கடந்த சில மாதங்களுக்கு முன் அசோக் நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி சிவகுமாரின் கூட்டாளி ஆவார்.
கொலைச் சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் தப்பியோடிய நிலையில், மயிலாப்பூர், ராயப்பேட்டை உதவி ஆணையர்கள் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தாயாரின் சபதம்
முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில் அருகே பிரபல ரவுடி கிழங்கு சரவணனின் கூட்டாளியான மயிலாப்பூரைச் சேர்ந்த மணி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிதீர்க்கவே இந்த கொலைச் சம்பவம் நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
குறிப்பாக, மணியை திட்டமிட்டு ஆனந்த் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட கும்பல் கொலை செய்ததாகவும், அதற்கு உருளை கோபி உதவி செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு பழிதீர்க்கும் பொருட்டு மணியின் தாயார், கிழங்கு சரவணன் மூலம் உருளை கோபியை கொலை செய்ய சபதம் ஏற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தனது மகனின் கொலை சம்பவம் நடந்த ஓராண்டுக்குள் சபதத்தை நிறைவேற்றும் வகையில், உருளை கோபியை தனது மகனின் கூட்டாளியான கிழங்கு சரவணன் உள்ளிட்டோர் உதவியுடன் தாயார் பாரதி கொலை செய்துள்ளார் என காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெசப்பாக்கம் காய்கறி கடை
அதுமட்டுமில்லாமல், உருளை ரவியை கொலை செய்த கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதையும், நெசப்பாக்கத்தில் உள்ள ஒரு காய்கறி கடையில் அரிவாள், ஆயுதங்களை பதுக்கிவிட்டு தலைமறைவானதையும் காவல்துறையினர் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
நெசப்பாக்கம் காய்கறி கடையில் இருந்து ஐந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த கடை உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், அந்த காய்கறி கடை கிழங்கு சரவணன், தக்காளி பிரபா, கோழி பாபு உள்ளிட்ட ரவுடிகளின் சந்திப்பு இடம் எனவும், அவர்கள் அனைவரும் அந்த குடோனில் இருந்துதான் ஒரு குழு மயிலாப்பூர் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், மற்றொரு கும்பல் கே.கே நகரில் நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அதிவேகமாகச் சென்ற கார் மோதி தூக்கி வீசப்பட்ட பாதசாரி: பதறவைக்கும் சிசிடிவி காட்சி!