தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்திற்கு பொருட்கள் வழங்கும் காமாட்சி அண்ட் கோ, அருணாச்சலா இம்பாக்ஸ், ஹிரா டிரேடர்ஸ், பெஸ்ட் டால் மில் மற்றும் இண்டகிரேடட் சர்வீஸ் புரோவைடர் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை மண்ணடி தம்பு செட்டி தெருவில் உள்ள அருணாச்சலம் இம்பெக்ஸ் என்ற நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். பருப்பு, எண்ணெய் பொருட்கள் உட்பட உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனத்தில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகள், தண்டையார்பேட்டையில் உள்ள பெஸ்ட் டால் மில், ஏழு கிணறு தாதா முத்தையப்பன் தெருவில் உள்ள ஹீரா ட்ரேடர்ஸ், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட், தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி & கோ எனும் நிறுவனத்திலும், மற்றும் அண்ணா நகரில் உள்ள இண்டிகிரேடட் அலுவலகம் தொடர்புடைய பத்ரி என்பவரின் வீடு மற்றும் சம்மந்தப்பட்ட உரிமையாளர்களின் வீடு தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் சிக்கியுள்ள நிறுவனங்கள் அரசின் பொது விநியோக திட்டத்திற்கு சர்க்கரை, பருப்பு, பாமாயில் உட்பட உணவுப் பொருட்களை விநியோகிக்கும் நிறுவனம் என தெரியவந்துள்ளது. இதில் அருணாச்சலம் இம்பேக்ஸ் மற்றும் இண்டகரேடட் சர்வீஸ் பிரைவேட் லிமிடேட் எனும் இரு நிறுவனங்கள் கடந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு வழங்கிய பொங்கல் சிறப்பு தொகுப்பிற்கு உணவு பொருட்களை சப்ளை செய்த நிறுவனம் என தெரியவந்துள்ளது.
கடந்த பொங்கல் பண்டிகையின் போது, 1,297 கோடி ரூபாய் செலவில், 2.15 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்தப் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, உப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு உட்பட 21 பொருட்கள் வருமான வரித்துறை சோதனையில் சிக்கி உள்ள நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த சோதனையானது 2 நாட்கள் தொடரும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத வருமானம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தெலங்கானா தொழில்துறை அமைச்சர் வீட்டில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை