சென்னை: பெரம்பூர் தாமோதரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்துவருபவர் சுசீலா (58), இவரது கணவன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துள்ளார். இதனால் சுசிலா தனியாக வசித்துவந்த நிலையில், அவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (பிப்ரவரி 6) அதிகாலை சுசீலா வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சுசீலா தீயில் எரிந்து கருகிய நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பெரம்பூர் காவல் துறையினர் தீயில் கருகி கிடந்த சுசிலாவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், கணவர் இறந்த நிலையில், உடல் நலம் மிகவும் பாதிப்படைந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என முதற்கட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தொடர் கொலை முயற்சிகள்..! : ரேசர் கணேசனை வலை வீசித் தேடும் காவல்துறை