திண்டுக்கல்: சொத்து தகராறில் ஏற்பட்ட முன் பகையால் பழிக்குப்பழியாக விவசாயி வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நத்தம் அருகே பெரியமலையூர்- பள்ளத்துக்காடு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளை (65). இவரும் அதே ஊரைச் சேர்ந்த ராசுவும் (80) உறவினர்கள். இவர்களுக்கிடையே பல வருடங்களாக சொத்து பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ராசு மகன் வெள்ளைகண்ணு, வெள்ளை உறவினர் தங்கராஜ் என்பவரால் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்கு நடைபெற்று வரும் சூழலில், இவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியது.
இதையடுத்து ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ராசுவின் மகன் அர்ஜுனன் (36), தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெள்ளையை சராமரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த வெள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன், காவல் ஆய்வாளர் ராஜமுரளி, துணை காவல் ஆய்வாளர் பாண்டியன் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளையின் உடலை மீட்டனர்.
பின்னர் உடற்கூராய்வுக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக அர்ஜுனன்(36), ஆறுமுகம்(32) ஆகிய இரண்டு பேரை கைது செய்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை காவல் துறையினர் கைப்பற்றினர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். காயமடைந்த ராசு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பழிக்குப்பழியாக நடைபெற்ற கொலை சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சுட்டுக் கொலை