கரூர்: கரூர் மாவட்டம் அமிர்தபுரி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (34), தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று(மார்ச் 8) இரவு 9 மணியளவில் கரூரிலிருந்து தென்னிலை நோக்கி பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, கரூர் கோவை நெடுஞ்சாலை கரைப்பாளையம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, கோவையில் இருந்து கரூர் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று சுரேஷ் மீது மோதியது.
அதில், சுரேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும், சாலையின் ஓரமாக நடந்து சென்ற 8 பேர் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், உயிரிழந்த சுரேஷின் உடல் கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்துகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையும் படிங்க : பிரபாகரன் தம்பி, உங்களை நம்பி - திருவொற்றியூர் மக்களிடம் சீமான் வாக்கு சேகரிப்பு