வேலூர்: காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி செளந்தர்யா (17) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நீட் தேர்வு எழுதிய பின், இரண்டு நாள்களாக மாணவி விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. மதிப்பெண் குறைந்துவிடும் என்ற பயத்தில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது.
காட்பாடி அருகே உள்ள தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் திருநாவுக்கரசு - ருக்குமணி தம்பதியர். இவர்களது மகள் சௌந்தர்யா (17) வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற சவுந்தர்யா, பொதுத் தேர்வில் 600க்கு 510 மதிப்பெண் பெற்று கடந்த செப்டம்பர் 12 அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதினார்.
தேர்வெழுதிய மூன்று நாட்கள் ஆன நிலையில் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். இதனை பல முறை தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார்.
Also read: தற்கொலை தீர்வல்ல! - நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் அபிலாஷா
இந்நிலையில், சௌந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவரும் வழக்கம்போல் இன்று வேலைக்கு சென்றனர். இச்சூழலில் மாணவி சௌந்தர்யா வீட்டில் வைத்து தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தகவலறிந்து வந்த வேலூர் லத்தேரி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து, மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பியுள்ளனர்.
தொடரும் நீட் மரணம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கூழையூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரின் இரண்டாவது மகன் தனுஷ் சில ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு முறை நடைபெற்ற நீட் தேர்வுகளில் அவர் தோல்வியடைந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றுவந்த தனுஷ், தோல்வி பயத்தில் தற்கொலை செய்துகொண்டார்
அதேபோல, சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகள் கனிமொழி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 562 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
நீட் தேர்வு எழுதிய இவருக்கு தேர்வு மிகக் கடினமாக இருந்துள்ளது. இதனால் தனது மருத்துவக் கனவு நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் செப்.13 அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தற்கொலை செய்துகொண்டார். இதனிடையே நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் காணாமல் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.