சென்னை: திருவல்லிக்கேணி காந்தி நகரைச் சேர்ந்தவர் மதன் (36). இவர் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்துவந்தார். மதன், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுகவில் துறைமுகம் தொகுதி 59ஆவது வார்டில் பகுதிச் செயலாளராக இருந்து, உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு திமுகவில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளார்.
நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கொலை
இந்நிலையில், திருவல்லிக்கேணி எஸ்.எம். நகர் எட்டாவது தெருவில் அடகுக் கடை அருகே மதன் நின்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத எட்டு பேர் கத்தியுடன் வந்து மதனைச் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பிச் சென்றனர். மதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்த திருவல்லிக்கேணி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடற்கூராய்விற்காக மதனின் உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் கொலை குறித்து காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மதன் திருமணம் செய்துகொள்ளாமல், அதே பகுதியில் உள்ள விதவைப் பெண்ணுடன் உறவில் இருந்து வந்ததாகத் தெரியவந்துள்ளது. இவர்களின் இத்தகைய உறவு பெண்ணின் மகன் வினோத் என்பவருக்குப் பிடிக்காமல் தனது நண்பர்களிடம் கூறியதாகத் தெரிகிறது.
4 பேர் கைது
ஏற்கனவே மதனைத் தீர்த்துக்கட்ட வேண்டும் எனத் திட்டமிட்ட வினோத், சமயம் பார்த்து தனது நண்பர்களான கணபதி, நரேன், உசேன் ஆகிய மூன்று பேருடன் திட்டம் தீட்டி நேற்று இரவு மதனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் திருவல்லிக்கேணி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காவல் துறை, தனிப்படை அமைத்துக் கொலைசெய்த திருவல்லிக்கேணி காந்தி நகரைச் சேர்ந்த வினோத், கணபதி, நரேன், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த உசேன் ஆகிய நான்கு பேரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தவுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் நான்கு பேரை திருவல்லிக்கேணி காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:விசிக, ஆதித்தமிழர் பேரவை கொடிகள் சேதம் - காவல் துறையினர் புகார்